கர்நாடகத்தில் அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் ஆக்சிஜன் ஆலைகள் - மந்திரி சுதாகர் தகவல்


கர்நாடகத்தில் அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் ஆக்சிஜன் ஆலைகள் - மந்திரி சுதாகர் தகவல்
x
தினத்தந்தி 19 Aug 2020 9:54 AM GMT (Updated: 19 Aug 2020 9:54 AM GMT)

கர்நாடகத்தில் அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் ஆக்சிஜன் ஆலைகளை நிறுவ முடிவு செய்து உள்ளதாக மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.

பெங்களூரு,

பெங்களூருவில் கிம்ஸ் அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த அரசு ஆஸ்பத்திரியில் 250-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கிம்ஸ் ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு திடீரென தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் அந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 47 நோயாளிகள் பவுரிங், விக்டோரியா, ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிகளுக்கு ஆம்புலன்சுகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று கிம்ஸ் அரசு ஆஸ்பத்திரியில் கர்நாடக மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர் திடீரென ஆய்வு செய்தார். அவர் ஆஸ்பத்திரியின் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சிகிச்சை வசதிகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கிம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 47 நோயாளிகள், ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டால் வேறு ஆஸ்பத்திரிகளுக்கு மாற்றப்பட்டு உள்ளனர். அனைத்து மருத்துவமனைகளுக்கும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் மிகப்பெரிய தேவை. அனைத்து மருத்துவமனைகளுக்கும் தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்குவதை உறுதி செய்யுங்கள் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன்.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால் அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது. கிம்ஸ் ஆஸ்பத்திரியும் அந்த சூழ்நிலையை எதிர்க்கொண்டு உள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் ஆக்சிஜன் ஆலைகளை நிறுவ முடிவு செய்து உள்ளோம். இதுதொடர்பாக சில தனியார் நிறுவனங்களுடனும் தொடர்பில் உள்ளோம்.

கடந்த முறை பிரதமர் மோடியுடன் மந்திரிகள் உரையாடிய போது ஆக்சிஜன் ஆலைகளை அமைக்க உதவுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. கொரோனா காரணமாக ஆக்சிஜன் சிலிண்டர்கள் தேவை 4 முதல் 5 மடங்கு அதிகரித்து உள்ளது. கிம்ஸ் ஆஸ்பத்திரியில் 2,400 கனமீட்டர் கொள்ளளவு கொண்ட திரவ ஆக்சிஜன் ஆலை உள்ளது. இருப்பினும் பெரும் தேவை காரணமாக பிரச்சினை எழுந்து உள்ளது.

பெங்களூருவை போல மாற்ற மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் சிலிண்டர் தேவை அதிகம் இல்லாததால் இதுவரை எந்த பிரச்சினையும் எழவில்லை. தேவை அதிகரிப்பதன் போது செலவும் அதிகமாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story