மே.வங்கம், ஒடிசா, ஜார்க்கண்டில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு; இந்திய வானிலை ஆய்வு மையம்


மே.வங்கம், ஒடிசா, ஜார்க்கண்டில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு; இந்திய வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 22 Aug 2020 11:59 AM GMT (Updated: 22 Aug 2020 11:59 AM GMT)

மே.வங்கம், ஒடிசா, ஜார்க்கண்டில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

தென்மேற்கு பருவமழை வட இந்திய மாநிலங்களை புரட்டி போட்டு வருகிறது. பீகார், மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில்,  வரும்  24 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை என 3 நாட்கள் மேற்கு வங்கம், ஒடிசா, ஜார்க்கண்ட், ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்திய வானிலை  ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், “ ஒடிசாவில் 24 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை என 3 நாட்கள் ஆங்காங்கே சில இடங்களில் மிக மிக கனமழை பெய்யும். 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் மேற்கு வங்காளத்தில் மிக கனமழை பெய்யக்கூடும். ஜார்க்கண்ட் மாநிலத்தில் 26 ஆம் தேதி மிக மிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு வங்காள விரிகுடா கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள  குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால், கிழக்கு மற்றும் மத்திய இந்தியாவில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அடுத்த 24  மணி நேரத்தில், தெற்கு ராஜஸ்தான், பீகார், மேற்கு மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Story