காங்.தலைவர்கள் பாஜகவுடன் தொடர்பு வைத்திருப்பதாக தான் கூறவில்லை என ராகுல் காந்தி விளக்கம் : கபில் சிபல்


காங்.தலைவர்கள் பாஜகவுடன் தொடர்பு வைத்திருப்பதாக தான் கூறவில்லை என ராகுல் காந்தி விளக்கம் :  கபில் சிபல்
x
தினத்தந்தி 24 Aug 2020 9:01 AM GMT (Updated: 24 Aug 2020 9:01 AM GMT)

காங்.தலைவர்கள் பாஜகவுடன் தொடர்பு வைத்திருப்பதாக தான் கூறவில்லை என ராகுல் காந்தி விளக்கம் அளித்ததாக கபில் சிபல் கூறினார்.

புதுடெல்லி,

கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, கட்சி தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார். இதைத்தொடர்ந்து, அவரது தாயார் சோனியா காந்தி கட்சியின் இடைக்கால தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு முழு நேர தலைவரை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் 24 பேர் சோனியா காந்திக்கு கூட்டாக கடிதம் எழுதினர்.  குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, கபில் சிபல் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டிருந்தனர். 

இந்நிலையில் தலைமை குறித்து ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் இன்று காணொலி மூலம் கூடியது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூத்த தலைவர் ஏ.கே.அந்தோனி, குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, கபில் சிபல், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி,  சோனியா காந்தி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தபோது அவருக்கு மூத்த தலைவர்கள் ஏன் கடிதம் அனுப்பினார்கள் என்றும், மூத்த தலைவர்கள் சிலர் பாஜகவுடன் சேர்ந்து செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார் என்று கூறியதாக தகவல்கள் வெளியானது.

ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டால் மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.  தனைத் தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் தனது  டுவிட்டர் பதிவில், “ நாங்கள் பாஜகவுடன் இணைந்து செயல்படுகிறோம் என ராகுல் காந்தி கூறுகிறார். 
30 ஆண்டுகளாக பாஜகவுக்கு ஆதரவாக எந்த ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை. நாங்கள் பாஜகவுடன் இணைந்து செயல்டுகிறோமா?’’என கபில் சிபல் கேள்வி  எழுப்பியிருந்தார். 

இந்த நிலையில், சிறிது நேரத்தில் மீண்டும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கபில் சிபில், “ காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவுடன் தொடர்பு வைத்திருக்கிறார்கள் என நான் கூறவில்லை என தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் அழைத்து ராகுல் காந்தி விளக்கம் அளித்தார். இதனால், நான் எனது முந்தைய டுவிட் பதிவை திரும்ப பெறுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Next Story