ராகுல் காந்தி அப்படி கூறவில்லை: குலாம் நபி ஆசாத்தும் மறுப்பு


ராகுல் காந்தி  அப்படி கூறவில்லை:  குலாம் நபி ஆசாத்தும் மறுப்பு
x
தினத்தந்தி 24 Aug 2020 11:54 AM GMT (Updated: 24 Aug 2020 11:54 AM GMT)

கட்சி தலைமை குறித்து கடிதம் எழுதியவர்கள் பாஜகவுடன் தொடர்பு வைத்துள்ளார்கள் என ராகுல் காந்தி கூறவில்லை என்று குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சிக்கு முழு நேர தலைவரை நியமிக்க வேண்டும், கட்சியில் பல்வேறு சீர் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அக்கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர், சோனியா காந்திக்கு கடிதம் எழுதி இருந்தனர். இந்த விவகாரம் குறித்து ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் காணொலி காட்சி வாயிலாக இன்று நடத்தப்பட்டது.

இதில் பேசிய சோனியா காந்தி, இடைக்காலத் தலைவர் பதவியை தொடர தான் விரும்பவில்லை என்று தெரிவித்தார். இதனை ஏற்க மறுத்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஏ.கே. ஆண்டனி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் சிலர், புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை கட்சித் தலைவர் பதவியை தொடர வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் சிலர் பாஜவுக்கு சாதகமாக செயல்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டியதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால், உடனடியாக அந்த தகவலை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களே மறுத்து கருத்து தெரிவித்தனர்.  

அந்த வகையில், முதலில் அதிருப்தி அடைந்ததாக சொல்லப்பட்ட குலாம் நபி ஆசாத்தும் ராகுல் காந்திக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து  குலாம் நபி ஆசாத் கூறும் போது, “'காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்திலோ அல்லது வெளியிலோ காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் பாஜகவுடன் இணைந்து செயல்படுவதாக ராகுல் காந்தி ஏதும் கூறவில்லை. இதுதொடர்பாக வெளியான தகவல் ஏதும் உண்மையில்லை” என்றார். 


Next Story