புதிய தேசிய கல்வி கொள்கை உண்மையில் பின்னடைவு ஏற்படுத்தி உள்ளது; சோனியா காந்தி


புதிய தேசிய கல்வி கொள்கை உண்மையில் பின்னடைவு ஏற்படுத்தி உள்ளது; சோனியா காந்தி
x
தினத்தந்தி 26 Aug 2020 10:59 AM GMT (Updated: 26 Aug 2020 10:59 AM GMT)

புதிய தேசிய கல்வி கொள்கை தொடர்புடைய அறிவிப்புகள் வருத்தம் அளிப்பதுடன் உண்மையில் ஒரு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது என சோனியா காந்தி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 1986ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட தேசிய கல்வி கொள்கையில், பின்னர் 1992ம் ஆண்டில் திருத்தம் செய்யப்பட்டது.  2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது, மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்தால் புதிய கல்வி கொள்கை உருவாக்கப்படும் என்று அந்த தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்து இருந்தது.

முந்தைய மோடி அரசில் ஸ்மிரிதி இரானி மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரியாக இருந்த போது, புதிய தேசிய கல்வி கொள்கையை வகுப்பதற்கான முயற்சிகளை பாரதீய ஜனதா அரசு தொடங்கியது.

பின்னர் இதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) முன்னாள் தலைவர் கே.கஸ்தூரி ரங்கன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழு புதிய கல்வி கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையை தயாரித்து, கடந்த ஆண்டு மே 31ந்தேதி மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி ரமேஷ் பொக்கிரியாலிடம் வழங்கியது.

பன்மொழி கல்வியை ஊக்குவித்தல், உலகில் மாறிவரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப டிஜிட்டல் கல்வி முறை, கற்பித்தலில் புதிய முறை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் புதிய கல்வி கொள்கையில் இடம்பெற்று உள்ளன.

பின்னர் அந்த அறிக்கை, பொதுமக்களின் கருத்தை அறிவதற்காக வெளியிடப்பட்டது. அதன்படி, அந்த அறிக்கை தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து 2 லட்சத்துக்கும் மேற்பட்ட யோசனைகள் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு வந்தன.

தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையில் கடந்த ஜூலை 29ந்தேதி நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில், புதிய தேசிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அத்துடன் மனித மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தை ‘கல்வி அமைச்சகம்‘ என பெயர் மாற்றவும் ஒப்புதல் வழங்கப்பட்டது.

புதிய கல்விக்கொள்கை குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்ததால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் உள்ளிட்டோரிடம் கருத்து கேட்க மத்திய கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இதன்படி, கடந்த திங்கட்கிழமை முதல் வருகிற 31ந்தேதி வரை நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கொடுத்துள்ள கேள்விகளுக்கு விடை அளிக்கும் வகையில் கருத்துருக்கள் பெறப்பட உள்ளன.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கூறும்பொழுது, மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட புதிய தேசிய கல்வி கொள்கை தொடர்புடைய அறிவிப்புகள் உண்மையில் நமக்கு வருத்தம் ஏற்படுத்தி உள்ளது.  அது உண்மையில் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.  மாணவர்களின் மற்ற பிரச்சனைகள் மற்றும் தேர்வுகள் பற்றிய விசயங்களும் அரசால் அக்கறையின்றி கையாளப்படுகின்றன என அவர் கூறியுள்ளார்.

பன்மொழி கல்வி ஊக்குவிப்பு என்ற முறையில் இந்தி திணிப்புக்கான முயற்சி நடக்கிறது என தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பின.  மாணவர்கள் பலரிடம் டிஜிட்டல் கல்வி முறைக்கான உபகரணங்கள் இல்லாத சூழலும் உள்ளன உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் அரசின் முன் சவாலாக உள்ள நிலையில் சோனியா காந்தி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

Next Story