1962- க்கு பிறகு மிகவும் தீவிரமான சூழல் நிலவுகிறது ; லடாக் விவகாரம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் கருத்து


1962- க்கு பிறகு மிகவும் தீவிரமான  சூழல் நிலவுகிறது ; லடாக் விவகாரம் குறித்து  வெளியுறவுத்துறை அமைச்சர் கருத்து
x
தினத்தந்தி 27 Aug 2020 10:29 AM GMT (Updated: 27 Aug 2020 10:29 AM GMT)

1962-ஆம் ஆண்டு இந்தியா- சீனா இடையே நடைபெற்ற போருக்கு பிறகு தற்போதுதான் எல்லையில் இந்த அளவுக்கு பதற்றம் அதிகரித்துள்ளதாக ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

லடாக்கில் சீன ராணுவம் அண்மைக்காலமாக தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த மே 20 ஆம் தேதி லடாக்கின் கிழக்குப்பகுதியில்  கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா - சீனா ராணுவ  வீரர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீனா தரப்பிலும் உயிர்சேதம் ஏற்பட்டது. 

இதையடுத்து, இந்தியா - சீனா இடையே ராணுவ மட்டத்திலும், தூதரக மட்டத்திலும் பல்வேறு சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. எனினும் , குறிப்பிட்ட அளவு தூரம் மட்டுமே சீன படைகள் பின்வாங்கியுள்ளன. இதனால், எல்லையில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்த வண்ணமே உள்ளது. 

இந்த நிலையில், 1962- ஆம் ஆண்டுக்கு பிறகு லடாக் எல்லையில் மிகவும் தீவிரமான சூழல் நிலவுகிறது  என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜெய்சங்கர் கூறியதாவது:- “சமீபத்தில் நடந்த உயிரிழப்புகள் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாதவையாகும். இதன் காரணமாக இரு நாட்டு எல்லையில் உள்ள படைகளின் எண்ணிக்கையும் முன்னெப்போதும் இல்லா அளவில் உள்ளது. 

இருநாட்டு ராணுவ மற்றும், ராஜதந்திர பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு ஆக்கிரமிப்புகள் சில இடங்களில் மட்டுமே திரும்பப்பெறப்பட்டுள்ளன..இரு அண்டை நாடுகளுக்கிடையிலான உறவுக்கு எல்லைப் பகுதிகளில் அமைதி என்பது இன்றியமையாததது என்பதை இந்தியா சீனாவுக்கு தெளிவாக தெரிவித்துள்ளது” இவ்வாறு அவர் கூறினார். 


Next Story