நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஏற்பாடுகள்; சபாநாயகர் ஓம்பிர்லா, அதிகாரிகளுடன் ஆலோசனை


நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஏற்பாடுகள்; சபாநாயகர் ஓம்பிர்லா, அதிகாரிகளுடன் ஆலோசனை
x
தினத்தந்தி 28 Aug 2020 11:09 PM GMT (Updated: 28 Aug 2020 11:09 PM GMT)

நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஏற்பாடுகள் குறித்து இரு அவைகளின் அதிகாரிகளுடன் சபாநாயகர் ஓம்பிர்லா ஆலோசனை நடத்தினார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், வருகிற 14-ந் தேதி தொடங்கும் என்று தெரிகிறது. அக்டோபர் 1-ந் தேதியுடன் தொடர் முடிவடைகிறது.இந்த கூட்டத்தொடருக்கான ஏற்பாடுகளை இறுதி செய்வது குறித்து மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா நேற்று ஆலோசனை நடத்தினார்.

அதில், இரு அவைகளின் அதிகாரிகள், மத்திய சுகாதார அமைச்சகம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உள்ளிட்ட அமைப்புகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி கூட்டத்தொடர் நடத்தப்படும் என்று ஓம்பிர்லா கூறினார்.

நேற்று முன்தினமும் இரு அவைகளின் அதிகாரிகளுடன் ஓம்பிர்லா ஆலோசனை நடத்தினார். கொரோனா பரவல் காலம் என்பதால், சமூக இடைவெளியை பின்பற்றி இருக்கைகளை மாற்றி அமைக்குமாறும், கிருமிநாசினி தெளிக்குமாறும் ஓம்பிர்லா கேட்டுக்கொண்டார்.

அதன்படி, மக்களவை செயலக அதிகாரிகள், இருக்கைகளை இடைவெளி விட்டு மாற்றி அமைத்து வருகிறார்கள். நேற்றைய கூட்டத்தில் இந்த ஏற்பாடுகள் குறித்து மக்களவை செயலாளர் சினேகலதா ஸ்ரீவஸ்தவா, மாநிலங்களவை செயலாளர் தேஷ் தீபக் வர்மா ஆகியோர் சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் தெரிவித்தனர். இதற்கிடையே, எம்.பி.க்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று சபாநாயகர் ஓம்பிர்லா தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு 72 மணி நேரத்துக்குள் எம்.பி.க்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுவார்கள்.

எம்.பி.க்கள் மட்டுமின்றி, அமைச்சக அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், மக்களவை செயலக, மாநிலங்களவை செயலக ஊழியர்கள் உள்பட நாடாளுமன்றத்துக்கு வருவதாக எதிர்பார்க்கப்படும் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும்போது, யாருக்கு வேண்டுமானாலும் திடீரென கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். நாடாளுமன்றத்துக்குள் நுழையும்போது, கையால் தொடாமலே பாதுகாப்பு சோதனை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

மழைக்கால கூட்டத்தொடர், காலை, மாலை என இரு அமர்வுகளாக நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story