தேசிய செய்திகள்

71 வயது கொரோனா நோயாளியை காப்பாற்ற ஆம்புலன்ஸ் டிரைவராக மாறிய டாக்டர் - புனேயில் நெகிழ்ச்சி சம்பவம் + "||" + Doctor turns ambulance driver to save 71-year-old corona patient in Pune

71 வயது கொரோனா நோயாளியை காப்பாற்ற ஆம்புலன்ஸ் டிரைவராக மாறிய டாக்டர் - புனேயில் நெகிழ்ச்சி சம்பவம்

71 வயது கொரோனா நோயாளியை காப்பாற்ற ஆம்புலன்ஸ் டிரைவராக மாறிய டாக்டர் - புனேயில் நெகிழ்ச்சி சம்பவம்
டாக்டர் ஒருவர் ஆம்புலன்ஸ் டிரைவராக மாறி கொரோனாவால் உடல்நலம் மோசம் அடைந்த 71 வயது நோயாளியின் உயிரை காப்பாற்றிய சம்பவம் புனேயில் நடந்து உள்ளது.
புனே,

கொரோனா போராட்ட களத்தில் மனித நேயத்துக்கு முன் உதாரணமாக டாக்டர் ஒருவர் திடீர் ஆம்புலன்ஸ் டிரைவராக மாறிய நெகிழ்ச்சி சம்பவம் மராட்டிய மாநிலத்தில் நடந்து உள்ளது.

அங்குள்ள புனே மார்க்கெட் யார்டு பகுதியில் அமைக்கப்பட்ட அரசு கொரோனா சிகிச்சை மையத்தில் கடந்த 14-ந் தேதி 71 வயது நோயாளி அனுமதிக்கப்பட்டார். அவரது மகன், மருமகள் ஆகியோர் தொற்று உறுதி செய்யப்பட்டு அங்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்தநிலையில் சம்பவத்தன்று அதிகாலையில் 71 வயது கொரோனா நோயாளிக்கு ஆக்சிஜன் அளவு குறைந்து உடல் நிலை மோசம் அடைந்தது. இதையடுத்து உயர் தர சிகிச்சை அளிக்க அவரை பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.


அப்போது பணியில் இருந்த ரஞ்சித் நிகம்(வயது35) என்ற டாக்டர், அந்த முதிய வயது நோயாளியை காப்பாற்றும் நோக்கில் போராட வேண்டியதாயிற்று. அந்த சிகிச்சை மையத்தில் இருந்த ஆம்புலன்ஸ் டிரைவர் திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கவே, 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து பார்த்தார். ஆனால் போன் இணைப்பு கிடைக்கவில்லை. மற்றொரு ஆம்புலன்சை அழைக்க முயற்சித்தும் பலனில்லை. இதையடுத்து நேரத்தை வீணடிக்க விரும்பாத டாக்டர் ரஞ்சித் நிகம் கையில் இருந்த ஸ்டெதஸ்கோப்பை கீழே போட்டுவிட்டு ஆம்புலன்ஸ் ஸ்டீயரிங்கை பிடித்தார். அவர் மற்றொரு டாக்டர் ராஜ் புரோகித்தை உதவிக்கு அழைத்து உயிருக்கு போராடிய கொரோனா நோயாளியுடன் ஆம்புலன்சை ஓட்டிச்சென்றார்.

2 ஆஸ்பத்திரியில் படுக்கை இல்லாததால், கடைசியாக ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு முதியவர் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சரியான நேரத்தில் டாக்டர் ஆம்புலன்ஸ் டிரைவராக மாறியதால் 71 வயது கொரோனா நோயாளியின் உயிர் காப்பாற்றப்பட்டது.

இதுகுறித்து டாக்டர் ரஞ்சித் நிகம் கூறுகையில், “வழக்கமாக நான் பவர் ஸ்டீரியங் வாகனங்கள் தான் ஓட்டி உள்ளேன். ஆம்புலன்ஸ் வேன் பழைய வாகனம் என்பதால் ஓட்ட சற்று கடினமாக இருந்தது. நோயாளியின் உயிரை காப்பாற்றுவதில் தான் மகிழ்ச்சி. எனவே தான் தாமதிக்காமல் ஆம்புலன்சை ஓட்டிச்சென்றேன்” என்றார்.

கொரோனா நோயாளியின் மகன் டாக்டர்களின் சேவையை மனதார பாராட்டி உள்ளார். அவர், இந்த டாக்டர்கள் உண்மையான கொரோனா போராட்ட வீரர்கள் என பெருமிதம் தெரிவித்து உள்ளார். மேலும் அவர் கூறும்போது, “டாக்டர்கள் ரஞ்சித் நிகம், ராஜ் புரோகித் ஆகியோர் ஆம்புலன்சை மட்டும் ஓட்டி செல்லவில்லை. அவர்கள் எனது தந்தைக்கு ஆஸ்பத்திரியில் படுக்கை கிடைக்கவும் கடும் முயற்சி செய்தனர். கடைசியில் அவர்கள் எனது தந்தையை ஆஸ்பத்திரியில் சேர்த்து உயிரை காப்பாற்றிவிட்டனர்” என உருக்கமாக கூறினார்.

அந்த சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வரும் மற்ற கொரோனா நோயாளிகளும் டாக்டர்களின் மனித நேய சேவையை வெகுவாக பாராட்டினர்.

தொடர்புடைய செய்திகள்

1. நிரவ் மோடியை காப்பாற்ற காங்கிரஸ் தீவிர முயற்சி - பா.ஜனதா குற்றச்சாட்டு
கடன் மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடியை காப்பாற்ற காங்கிரஸ் கட்சி தன்னால் இயன்ற அளவுக்கு முயற்சிக்கிறது என்று பா.ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.