அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பெங்களூருவில் ‘ஏரோ இந்தியா’ விமான கண்காட்சி


அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பெங்களூருவில் ‘ஏரோ இந்தியா’ விமான கண்காட்சி
x
தினத்தந்தி 29 Aug 2020 4:00 AM GMT (Updated: 29 Aug 2020 4:00 AM GMT)

பெங்களூருவில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ‘ஏரோ இந்தியா’ விமான கண்காட்சி 5 நாட்கள் நடக்கிறது.

பெங்களூரு, 

பெங்களூரு எலகங்கா பகுதியில் விமான படை தளம் உள்ளது. இந்த விமான படை தளத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ‘ஏரோ இந்தியா’ என்ற பெயரில் விமான கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த கண்காட்சியில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த விமான நிறுவனங்கள், ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்கள் கலந்து கொள்ளும். விமான கண்காட்சியையொட்டி வானில் போர் விமானங்களின் சாகச காட்சிகளும் இடம்பெறும். 

கடந்த 1996-ம் ஆண்டு முதல் பெங்களூருவில் விமான கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு(2019) பெங்களூருவில் ‘ஏரோ இந்தியா’ விமான கண்காட்சி நடந்தது. முன்னதாக இந்த விமான கண்காட்சியை உத்தர பிரதேச மாநிலத்திற்கு மாற்ற மத்திய அரசு முடிவு செய்து இருந்தது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அப்போதைய முதல்-மந்திரி குமாரசாமி, மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனிடம் பேசி பெங்களூருவிலேயே விமான கண்காட்சியை நடத்த ஏற்பாடு செய்து இருந்தார்.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு(2021) பெங்களூருவில் விமான கண்காட்சி நடைபெறும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்து இருந்தது. ஆனால் விமான கண்காட்சி நடைபெறும் தேதி குறிப்பிடவில்லை. இந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளதால் பெங்களூருவில் விமான கண்காட்சி நடைபெறுவது சாத்தியமா? என்று கேள்வி எழுந்தது. மேலும் கொரோனா பாதிப்புக்கு மத்தியில் பெங்களூருவில் விமான கண்காட்சியை நடத்துவது குறித்து மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்தி வந்தார்.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு(2021) பெங்களூருவில் விமான கண்காட்சி நடைபெறுவதை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்து உள்ளது. அதாவது அடுத்த ஆண்டு(2021) பிப்ரவரி மாதம் 3-ந் தேதி தொடங்கி 7-ந் தேதி வரை 5 நாட்கள் பெங்களூருவில் ‘ஏரோ இந்தியா’ விமான கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் முதல் 3 நாட்கள் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி இல்லை. கடைசி 2 நாட்கள் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. இந்த கண்காட்சியில் பல நாடுகளின் முக்கிய பிரதிநிதிகள், பெரிய நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த விமான கண்காட்சியின் போது இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தியை ஊக்குவிக்கும் முயற்சியை வெளிப்படுத்த மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.


Next Story