வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க செல்லும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு - இந்திய மருத்துவ கவுன்சில் டெல்லி ஐகோர்ட்டில் தகவல்


வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க செல்லும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு - இந்திய மருத்துவ கவுன்சில் டெல்லி ஐகோர்ட்டில் தகவல்
x
தினத்தந்தி 29 Aug 2020 9:16 PM GMT (Updated: 29 Aug 2020 9:16 PM GMT)

வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க செல்லும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளித்துள்ள இந்திய மருத்துவ கவுன்சில், அடுத்த ஆண்டு தேர்வு எழுதி தகுதி பெற வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டில் தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக மாணவர்களின் கல்வி பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. இதில் முக்கியமாக மருத்துவ படிப்புகளுக்கு செல்லும் மாணவர்களுக்கான நீட் தேர்வு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. இது அடுத்த மாதம் நடைபெற இருக்கும் நிலையில், மீண்டும் தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்துள்ளன.

இவ்வாறு நீட் தேர்வில் காலதாமதம் ஏற்படுவதால், வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க திட்டமிட்டுள்ள மாணவர்களால் அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் அவர்களின் படிப்பு பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில், ‘மலேசியாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் சேர்வதற்காக தனது மகளுக்கு நீட் தேர்வில் தகுதி பெறுவதில் இருந்து ஒருமுறை விலக்கு அளிக்க வேண்டும்’ என டெல்லி ஐகோர்ட்டில் பாஸ்கர பிரசாத் என்பவர் வழக்கு தொடர்ந்தார். மேலும் வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கு அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி காமேஸ்வர் ராவ் முன்பு, இந்திய மருத்துவ கவுன்சில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவம் படிக்க செல்லும் மாணவர்கள் இந்த ஆண்டு அல்லது 2021-ம் ஆண்டில் நீட் தேர்வை எழுதிக்கொள்ளலாம். கொரோனா தொற்றால் நாட்டில் நிலவி வரும் அசாதாரண சூழல் காரணமாக, ஒருமுறை நடவடிக்கையாக, வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க செல்லும் மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது.

அவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்புகளுக்கான வெளிநாட்டு மருத்துவ விதிமுறைகள் 2002-ன் கீழ் அனைத்து அடிப்படைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். அதைப்போல பட்டதாரி மருத்துவக்கல்வி 1997-ன் கீழும் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி வெளிநாட்டு மருத்துவப்படிப்பை தொடரலாம்.

நீட் தேர்வில் தகுதி பெறுவது அவசியம் என்ற முன்நிபந்தனை கொண்ட வெளிநாட்டு நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் மருத்துவப்படிப்பை தொடர விரும்பும் அனைத்து மாணவர்களுக்கும் இந்த அனுமதி பொருந்தும்.

2020 அல்லது 2021-ம் ஆண்டுகளில் நீட் தேர்வில் தகுதி பெறுவது மாணவர்களின் பொறுப்பாகும். அவ்வாறு அவர்கள் தகுதி பெறத் தவறினால், வெளிநாட்டு மருத்துவ படிப்புகளைத் தொடர முடிவெடுப்பது அவர்களின் சொந்த பொறுப்பில் இருக்கும். அவர்களுக்கு சம்பந்தப்பட்ட மாநில மருத்துவ கவுன்சில் தற்காலிக அல்லது நிரந்தர பதிவு வழங்க உரிமை இல்லை.

இவ்வாறு இந்திய மருத்துவ கவுன்சில் தனது பதில் மனுவில் கூறியுள்ளது.

Next Story