பாகிஸ்தானுக்கு ஆதரவாக தேசதுரோக செயலில் ஈடுபட்ட காஷ்மீர் போலீஸ் உயரதிகாரி; அதிர்ச்சி தகவல் வெளியீடு


பாகிஸ்தானுக்கு ஆதரவாக தேசதுரோக செயலில் ஈடுபட்ட காஷ்மீர் போலீஸ் உயரதிகாரி; அதிர்ச்சி தகவல் வெளியீடு
x
தினத்தந்தி 30 Aug 2020 1:38 PM GMT (Updated: 30 Aug 2020 1:38 PM GMT)

இந்திய வெளிவிவகார அமைச்சகத்துடன் தொடர்பு ஏற்படுத்தி காஷ்மீர் போலீஸ் உயரதிகாரி பாகிஸ்தானுக்கு ஆதரவாக தேசதுரோக செயலில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் காசிகண்ட் பகுதியில் கடந்த ஜனவரி 11ந்தேதி நடந்த வாகன சோதனையில் நவீத் பாபு, ராவுத்தர் மற்றும் வழக்கறிஞரான மீர் உள்ளிட்டோருடன் ஜம்மு மற்றும் காஷ்மீரின் துணை போலீஸ் சூப்பிரெண்டு தேவேந்தர் சிங் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அந்த வாகனத்தில் இருந்து, ஏ.கே. 47 ரக துப்பாக்கி, 3 பிஸ்டல்கள் மற்றும் அதிக அளவில் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.  இதனை தொடர்ந்து, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஜனவரி 17ந்தேதி வழக்கை கையிலெடுத்து விசாரணையை தொடங்கினர்.

இதில், தடை செய்யப்பட்ட ஹிஜ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகளுக்கு தனது சொந்த வாகனத்தில் பயணம் செய்ய வழிவகை செய்து கொடுத்தது, ஆயுத கொள்முதலுக்கு உதவி, ஜம்மு நகரில் பாதுகாப்புடன் தங்குவதற்கு இடவசதி அளித்தல் உள்ளிட்டவற்றை சிங் செய்திருந்தது விசாரணையில் தெரிய வந்தது.

எல்லையை கடந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை கொள்முதல் செய்ய ஆயுத கடத்தல்காரர்கள் மற்றும் சிங் உதவியுள்ளனர்.  இவை பின்னர் பயங்கரவாத செயல்களுக்கு பயன்பட்டுள்ளன.

சிங், தடை செய்யப்பட்ட ஹிஜ்புல் முஜாகிதீன் பயங்கரவாத குழுவுக்கு ஆதரவாக செயல்பட்ட குற்றச்சாட்டில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

கடந்த ஜூலை முதல் வாரத்தில் இவர்கள் மீது 3,064 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.  அதில், இந்தியாவுக்கு எதிராக போர் தொடுத்தவர்கள் என சிங் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.

அவரை பாகிஸ்தான் நாட்டில் இருந்து சிலர் இயக்கியுள்ளனர்.  இதன்படி, மத்திய வெளிவிவகார அமைச்சகத்துடன் தொடர்பு ஏற்படுத்தி தேச துரோக செயல்களில் ஈடுபட அவர் முயற்சித்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.  டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் இருந்த சிலருடன் அவர் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளார்.  அவர்களது தொலைபேசி எண்களையும் பாகிஸ்தான் சகோதரர்கள் என்ற பெயரில் சேமித்து வைத்துள்ளார்.  எனினும் சிங், திட்டமிட்டபடி எதுவும் செய்ய முடியவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story