இந்தியாவின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்தை கடந்தது; புதிய உச்சமாக ஒரே நாளில் 78,761 பேருக்கு தொற்று


இந்தியாவின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்தை கடந்தது; புதிய உச்சமாக ஒரே நாளில் 78,761 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 30 Aug 2020 11:36 PM GMT (Updated: 30 Aug 2020 11:36 PM GMT)

இந்தியாவில் புதிய உச்சமாக ஒரே நாளில் 78,761 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம் நாட்டின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்தை கடந்துள்ளது.

புதுடெல்லி,

உலக மக்களிடையே கடந்த பல மாதங்களாக பீதியை ஏற்படுத்தி இருக்கும் கொரோனா எனும் பெருந்தொற்று, இந்தியாவிலும் நாளுக்கு நாள் தனது ஆக்டோபஸ் கரங்களை விரித்து வருகிறது. சில பத்தாயிரங்களில் புதிய பாதிப்புகளை தினமும் வழங்கி வருகிறது. கணிசமான எண்ணிக்கையில் உயிர்களையும் காவு கொண்டு வருகிறது.

அந்தவகையில் நேற்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது. இதுவரை இல்லாத அதிக அளவாக 78 ஆயிரத்து 761 பேர் ஒரே நாளில் கொரோனாவிடம் சிக்கி இருக்கின்றனர். இதன் மூலம் நாட்டின் பாதிப்பு மொத்த எண்ணிக்கையும் 35 லட்சத்தை கடந்து இருக்கிறது.

நேற்று காலை 8 மணி நிலவரப்படி இந்தியாவில் 35 லட்சத்து 42 ஆயிரத்து 733 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தியா, 30 லட்சம் கொரோனா நோயாளிகள் என்ற நிலையை கடந்த 23-ந்தேதிதான் எட்டியிருந்தது. அடுத்த ஒரு வாரத்துக்குள் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதைப்போல அந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 948 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கின்றனர். இந்த எண்ணிக்கையும் தற்போது 63 ஆயிரத்து 498 ஆக உயர்ந்து இருக்கிறது.

உயிரிழந்த 948 பேரில் அதிகபட்சமாக மராட்டியத்தில் 328 பேர், கர்நாடகாவில் 115, தமிழகத்தில் 87 பேர் பலியாகி இருக்கின்றனர். அடுத்ததாக ஆந்திரா (82), உத்தரபிரதேசம் (62), மேற்கு வங்காளம் (53), பஞ்சாப் (41), மத்திய பிரதேசம் (22), ஜார்கண்ட் (16), டெல்லி (15), ஒடிசா (14), குஜராத் மற்றும் ராஜஸ்தானில் தலா 13 என பல மாநிலங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன.

இதைப்போல மொத்த சாவு எண்ணிக்கையிலும் மராட்டியமே முதலிடம் பெற்றுள்ளது. அங்கு இதுவரை 24 ஆயிரத்து 103 பேர் தங்கள் இன்னுயிரை இழந்திருக்கின்றனர். அடுத்ததாக 7,137 பலி எண்ணிக்கையுடன் தமிழகம் 2-வது இடத்திலும், 5,483 சாவு எண்ணிக்கையுடன் கர்நாடகா 3-வது இடத்தையும் பிடித்து உள்ளன.

மேலும் டெல்லி (4,404), ஆந்திரா (3,796), உத்தரபிரதேசம் (3,356), மேற்கு வங்காளம் (3,126), குஜராத் (2,989) மற்றும் பஞ்சாப் (1,348), மத்திய பிரதேசம் (1,345), ராஜஸ்தான் (1,030) போன்ற மாநிலங்களும் கணிசமான கொரோனா பலி எண்ணிக்கையை பெற்றிருக்கின்றன.

இதற்கிடையே கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 27 லட்சத்தை கடந்து உள்ளது. நேற்று காலை வரையிலான நிலவரப்படி இதுவரை 27 லட்சத்து 13 ஆயிரத்து 933 பேர் கொரோனாவை வென்று உள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் விகிதம் 76.61 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில் 7 லட்சத்து 65 ஆயிரத்து 302 பேர் மட்டுமே பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 21.60 சதவீதம் ஆகும்.

இதைப்போல இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதமும் 1.79 ஆக சரிந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இது ஒருபுறம் இருக்க நாடு முழுவதும் நடத்தப்பட்டு வரும் கொரோனா பரிசோதனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் நடந்த 10 லட்சத்து 55 ஆயிரத்து 27 பரிசோதனைகளையும் சேர்த்து இதுவரை, 4 கோடியே 14 லட்சத்து 61 ஆயிரத்து 636 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளன.

கொரோனாவுக்கு எதிராக ஒவ்வொரு நாடும் பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என கூறியுள்ள உலக சுகாதார அமைப்பு, ஒவ்வொரு நாடும் 10 லட்சம் பேருக்கு குறைந்தபட்சம் 140 பரிசோதனைகளை நாளொன்றுக்கு மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.

ஆனால் இந்தியாவை பொறுத்தவரை இந்த எண்ணிக்கையை ஒவ்வொரு மாநிலமும், யூனியன் பிரதேசமும் ஏற்கனவே கடந்து விட்டதாக கூறியுள்ள மத்திய அரசு, இந்த பரிசோதனைகள் அதிகரித்தாலும் தொற்றை குறைக்கும் நடவடிக்கையில் பல்வேறு மாநிலங்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்து உள்ளது.

Next Story