இந்தியாவில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரிக்க காரணம் என்ன? - நிபுணர்கள் விளக்கம்


இந்தியாவில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரிக்க காரணம் என்ன? - நிபுணர்கள் விளக்கம்
x

இந்தியாவில் ஒரே வாரத்தில் 5 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், நாட்டில் தொற்றின் வேகம் அதிகரிப்பதற்கான காரணங்களை நிபுணர்கள் விளக்கி உள்ளனர்.

புதுடெல்லி,

கொரோனா தொற்றின் வேகம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இங்கு கடந்த 4 நாட்களாக தொடர்ந்து 70 ஆயிரத்துக்கு அதிகமான புதிய நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 1 வாரத்தில் மட்டும் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவிடம் சிக்கி உள்ளனர்.

அதிக மக்கள் தொகையை கொண்டுள்ள நாடான இந்தியாவில் இத்தகைய தொற்று வேகம் மக்களை கவலையடையச் செய்துள்ளது. எனவே இந்த தொற்றை கட்டுப்படுத்தி மக்களை பாதுகாக்க அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதற்காக பரிசோதனைகளை தீவிரப்படுத்துதல், நோயாளிகளை கண்டறிதல் மற்றும் தீவிர சிகிச்சை அளித்தல் என்ற தாரக மந்திரங்களை அரசுகள் பின்பற்றி வருகின்றன.

இந்தியாவில் இவ்வாறு கொரோனாவின் வேகம் அதிகரிப்பதற்கான காரணம் குறித்து நிபுணர்கள் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் கண்டறிந்த விஷயங்களை அவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.

இது குறித்து இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சிலின் தொற்று நோய்கள் பிரிவு தலைவர் டாக்டர் சமிரன் பண்டா கூறுகையில், ‘கொரோனா பரிசோதனையின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதால், அதிக எண்ணிக்கையிலான புதிய நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர். அத்துடன் ஊரடங்கு தளர்வுகள் மற்றும் கொரோனாவுக்கு எதிராக மக்களிடம் நிலவும் மெத்தனப்போக்கு போன்றவையும் தொற்றின் வேகம் அதிகரிப்பதற்கான காரணங்கள் ஆகும்’ என்று தெரிவித்தார்.

அறிகுறி இல்லாதவர்கள் மற்றும் லேசான அறிகுறிகள் கொண்டவர்களால் இந்த நோய் அதிகமாக பரவுவதாக தெரிவித்த பண்டா, எனவே இத்தகைய பரவல் முறையை தடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் இந்தியாவில் கொரோனாவின் இந்த வேகம் எதிர்பார்த்ததுதான் எனவும், எனினும் மாநிலங்களில் ஒரே சீராக இல்லாதது ஆறுதலானது என்றும் தெரிவித்தார்.

முன்னணி வைராலஜிஸ்டான டாக்டர் சாகித் ஜமீல் கூறும்போது, ‘முக கவசம் அணிதல், கைகளை கழுவுவது மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற அறிவுரைகளை மக்கள் புறக்கணித்துள்ளனர். இதற்கு காரணம், நாட்டில் தொற்றில் இருந்து மீள்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு, குறைவான சாவு விகிதம் போன்ற அறிவிப்புகளால் ஏற்பட்டுள்ள மெத்தனமே ஆகும். ஆனால் நாம் அதிக தினசரி பாதிப்பை கொண்டுள்ளோம். உலக அளவில் 3-வது அதிக நோயாளிகளை பெற்றிருக்கிறோம் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்’ என்று எச்சரித்தார்.

இந்திய மருத்துவ சங்க முன்னாள் தலைவரும், ஆசியா-ஓசியானியா மருத்துவ சங்க கூட்டமைப்பு தலைவருமான டாக்டர் அகர்வால் கூறுகையில், ‘இப்படியே போனால் இந்தியா கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் பிரேசில் மற்றும் அமெரிக்காவையும் மிஞ்சிவிடும். இது 6 வாரங்களிலேயே நடக்கலாம். தற்போதைய சூழலில் பரிசோதனைகளை அதிகரிப்பதை தவிர அரசுக்கு வேறு வழியில்லை. ஆனால் தனி மனிதர்கள் மட்டத்தில் எச்சரிக்கையாக இருப்பதே சிறந்தது’ என்று கூறினார்.

ஊடரங்கு தளர்வுகள் புதிய நோயாளிகளை உருவாக்கும் எனக்கூறிய அவர், தற்போதைய நிலையில் பலி எண்ணிக்கையை குறைப்பதே முக்கியமானது எனவும், இதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார்.

Next Story