கொரோனா பரவல் காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு தள்ளிவைப்பு


கொரோனா பரவல் காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 30 Aug 2020 11:52 PM GMT (Updated: 30 Aug 2020 11:52 PM GMT)

கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு நடைபெற இருந்த மக்கள் தொகை மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதற்கு முன் 2011-ம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரம் வெளியிடப்பட்டது.

தேசிய மக்கள் தொகை பதிவேடு தொடர்பான விவரங்கள் கடந்த 2010-ம் ஆண்டு சேகரிக்கப்பட்டன. 2015-ம் ஆண்டில் அந்த பதிவேட்டை மேம்படுத்தும் போது மக்களிடம் இருந்து ஆதார் எண், செல்போன் எண் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அதன்பிறகு இந்த ஆண்டில் (2020) மக்கள் தொகை மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பையும் மேற்கொண்டு, அதுபற்றிய விவரங்களை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 1-ந் தேதி வெளியிட மத்திய அரசு திட்டமிட்டு இருந்தது. இந்த முறை தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்காக ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை விவரங்களையும் சேகரிக்க முடிவு செய்யப்பட்டது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகிய இரு கணக்கெடுப்பு பணிகளையும் கடந்த ஏப்ரல் 1-ந் தேதி தொடங்கி வருகிற செப்டம்பர் 30-ந் தேதிக்குள் நடத்தி முடிக்க தீர்மானிக்கப்பட்டு இருந்தது.

130 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் பரந்து விரிந்த இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது என்பது மிகவும் சவாலான பணி ஆகும். எனவே, இந்த பணியில் நாடு முழுவதும் 30 லட்சத்துக்கு அதிகமான அதிகாரிகளை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே இந்தியாவில் கொரோனா தொற்று பரவ தொடங்கியது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்துவந்த போதிலும், நோய்த்தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

இதை கருத்தில் கொண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பு தள்ளிவைக்கப்பட்டு இருப்பதாகவும், இனி இந்த ஆண்டில் கணக்கெடுப்பு நடைபெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் டெல்லியில் நேற்று மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். லட்சக்கணக்கான அதிகாரிகள் வீடு, வீடாக சென்று கணக்கெடுக்க வேண்டும் என்பதால் அனைவருடைய உடல் நலனை கருத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பு அத்தியாவசியமான பணி இல்லை என்றும், ஓர் ஆண்டு தாமதமானாலும்கூட எந்த பாதிப்பும் இல்லை என்றும் அந்த அதிகாரி கூறினார்.

Next Story