முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறைவுக்கு ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சி இரங்கல்


முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறைவுக்கு ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சி இரங்கல்
x
தினத்தந்தி 31 Aug 2020 3:46 PM GMT (Updated: 31 Aug 2020 3:46 PM GMT)

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறைவுக்கு ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த 10ந்தேதி உடல்நல குறைவால் டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், அவரது மூளையில் ரத்தம் உறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு ஆபரேஷன் செய்து அகற்றப்பட்டது.  ஆனால் அதன்பின் அவரது உடல்நிலை மோசமடைந்தது.  நுரையீரல் தொற்று ஏற்பட்ட நிலையில், ஆழ்ந்த கோமா நிலையிலேயே இருந்த பிரணாப் முகர்ஜியின் உடல் நிலையை மருத்துவ குழு தீவிரமாக கண்காணித்து வந்தது.

இவற்றுக்கிடையே கொரோனா பாதிப்புக்கும் அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.  இந்நிலையில், சிகிச்சை பலனின்றி பிரணாப் முகர்ஜி இன்று காலமானார்.  அவருக்கு வயது 84.  அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதுபற்றி காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி எம்.பி. வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நம்முடைய முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி துரதிர்ஷ்டவசமாக காலமானார் என்ற செய்தி நாட்டுக்கு கிடைத்தது பெரிய வருத்தமளிக்கிறது.

அவருக்கு இந்தியா அஞ்சலி செலுத்துவதில் நானும் இணைந்து கொள்கிறேன்.  அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திரு. பிரணாப் முகர்ஜி அவர்கள் மறைவால் நாங்கள் ஆழ்ந்த வேதனை அடைந்துள்ளோம்.

முன்னாள் இந்திய ஜனாதிபதி மற்றும் காங்கிரசின் உயர்ந்த தலைவர்களில் ஒருவரான பிரணாப் முகர்ஜி அவரது நேர்மை மற்றும் பரிவு ஆகியவற்றுக்காக எப்பொழுதும் நினைவில் கொள்ளப்படுவார்.  அவரது குடும்பத்தினர், அவரை பின்பற்றுவோர் மற்றும் நாட்டுக்காக நாங்கள் வேண்டி கொள்கிறோம் என தெரிவித்து உள்ளது.

Next Story