கிராமப்புற அரசு ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும் டாக்டர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு


கிராமப்புற அரசு ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும் டாக்டர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
x

கிராமப்புற அரசு ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும் டாக்டர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு கூறி உள்ளது.

புதுடெல்லி,

கிராமப்புறங்களில் பணிபுரியும் டாக்டர்களுக்கு மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக இந்திய மருத்துவ கவுன்சில் வரையறுத்துள்ள விதிமுறைகளை எதிர்த்து தமிழ்நாடு மருத்துவ அதிகாரிகள் சங்கம் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

கிராமப்புறங்கள் மற்றும் மலைப்பகுதிகளில் பணியாற்றும் அரசு டாக்டர்களுக்கு, முதுநிலை மருத்துவ படிப்புக்கான சேர்க்கையில் தமிழக அரசால் சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இதனால் கிராமப்புறங்களில் மருத்துவ சேவை செய்யும் மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

ஆனால் கடந்த 2017-ம் ஆண்டில் இந்திய மருத்துவ கவுன்சில் பிறப்பித்த உத்தரவில், மருத்துவ மேற்படிப்புக்கான சேர்க்கை “நீட்” தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே நடத்த உத்தரவிட வேண்டும் என்றும், உள் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது என்றும் கூறப்பட்டு இருந்தது.

மருத்துவ படிப்பில் தரக்கட்டுப்பாட்டை மருத்துவ கவுன்சில் கவனித்துக்கொள்ளலாம். ஆனால் மருத்துவ மேற்படிப்புக்கான சேர்க்கையில் மாநில அரசு வழங்கும் இடஒதுக்கீட்டை அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இதேபோல் சில மருத்துவ அமைப்புகளும் தனியார்களும் மனு தாக்கல் செய்து இருந்தனர்.

இந்த மனுக்கள் அனைத்தையும் விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந்தேதியன்று பிறப்பித்த இடைக்கால உத்தரவில் இந்த மனு தொடர்பாக எந்த இடைக்கால நிவாரணமும் வழங்க முடியாது என்றும், மாணவர் சேர்க்கை என்பது இந்த வழக்கின் இறுதித்தீர்ப்பின் அடிப்படையிலேயே அமையும் என்றும் கூறப்பட்டது.

தொடர்ந்து இந்த வழக்கின் மீதான விசாரணை நீதிபதிகள் அருண் மிஸ்ரா, இந்திரா பானர்ஜி, வினித் சரண், எம்.ஆர்.ஷா, அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் கடந்த ஜூலை 14-ந்தேதி இந்த வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில் நேற்று நீதிபதிகள் அருண் மிஸ்ரா, இந்திரா பானர்ஜி, வினித் சரண், எம்.ஆர்.ஷா, அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய காணொலி அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது.

தீர்ப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கிராமப்புறங்களில் பணிபுரியும் டாக்டர்களுக்கு மருத்துவ மேல்படிப்பில் இடஒதுக்கீடு வழங்க மாநிலங்களுக்கு சட்டரீதியான அதிகாரம் உண்டு. இந்த இடஒதுக்கீட்டில் மாநில அரசுகளுக்கு அதிகாரம் கிடையாது என்ற மருத்துவ கவுன்சிலின் உத்தரவு நியாயமற்றது, சட்டவிரோதமானது.

இந்திய மருத்துவ கவுன்சில் என்பது அரசால் சட்டபூர்வமாக அமைக்கப்பட்ட ஒரு நிறுவனம். இந்த நிறுவனத்துக்கு இட ஒதுக்கீட்டை தீர்மானிக்கும் அதிகாரம் கிடையாது. இதுபோன்ற உள்ஒதுக்கீடு என்பது அரசு மருத்துவமனைகளிலும் கிராமப்புறங்கள் மற்றும் ஒதுக்குப்புற பகுதிகளில் பணிபுரியும் டாக்டர்களுக்கு பெருமளவில் ஊக்கம் அளிக்கும்.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

Next Story