21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உடல் தகனம்


21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உடல் தகனம்
x
தினத்தந்தி 2 Sept 2020 4:45 AM IST (Updated: 2 Sept 2020 3:55 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல், 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

புதுடெல்லி,

இந்திய அரசியலில் அரை நூற்றாண்டு காலத்துக்கு மேல் ஆதிக்கம் செலுத்தி வந்தவர், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி (வயது 84). இவர், கொரோனா வைரஸ் தொற்று உள்ளிட்ட உடல்நல பிரச்சினைகளால் டெல்லி ராணுவ ஆஸ்பத்திரியில் கடந்த 10-ந் தேதி சேர்க்கப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை மோசமாகி கோமாவில் ஆழ்ந்தார். 3 வார கால போராட்டத்துக்கு பின்னர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை அவர் மரணம் அடைந்தார். நாட்டின் மிக உயரிய சிவிலியன் விருதான பாரத ரத்னா விருது பெற்ற அவரது மறைவுக்கு, நாடு 7 நாள் துக்கம் கடைப்பிடிக்கிறது.

அவரது உடல், டெல்லி ராணுவ ஆஸ்பத்திரியில் இருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நேற்று காலை எண்.10, ராஜாஜி மார்க்கில் உள்ள அவரது இல்லத்துக்கு எடுத்து வரப்பட்டது.

அங்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் நேரில் வந்து, மலர் வளையம் வைத்து மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பாரதீய ஜனதா கட்சி தலைவர் ஜே.பி.நட்டா, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், நிர்மலா சீதாராமன், ஹர்சவர்தன் உள்ளிட்ட மூத்த மத்திய மந்திரிகள், காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா, பாரதீய ஜனதா மூத்த தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், நாடாளுமன்ற மக்களவை தி.மு.க. தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

முப்படைகளின் தளபதி பிபின் ராவத், தளபதிகள் எம்.எம்.நரவனே (ராணுவம்), ஆர்.கே.எஸ்.பதாரியா (விமானப்படை), கரம்பீர்சிங் (கடற்படை) ஆகியோரும் பிரணாப் முகர்ஜியின் இல்லம் வந்து, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இது கொரோனா பெருந்தொற்று காலம் என்பதால் பிரணாப் முகர்ஜிக்கு அஞ்சலி செலுத்த வந்த அனைத்து தலைவர்களும் முக கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை பின்பற்றினர். பிரணாப் முகர்ஜியின் இறுதி ஊர்வலம் நேற்று மதியம் நடந்தது. அவரது உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் லோதி ரோட்டில் உள்ள மின் மயானத்துக்கு எடுத்து வரப்பட்டது.

அங்கு அவரது உடலுக்கு குடும்பத்தினரும், நெருங்கிய உறவினர்களும் பி.பி.இ. என்னும் சுயபாதுகாப்பு உடைகள் அணிந்து வந்து, இறுதி அஞ்சலி செலுத்தினர். அதைத் தொடர்ந்து அவரது மகன் அபிஜித் முகர்ஜி சடங்குகள் செய்தார். அதன்பின்னர் 21 குண்டுகள் முழங்க, பிரணாப் முகர்ஜியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

Next Story