வருகிற 10-ந் தேதி முதல் குருவாயூர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி


வருகிற 10-ந் தேதி முதல் குருவாயூர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி
x
தினத்தந்தி 2 Sept 2020 7:34 AM IST (Updated: 2 Sept 2020 7:34 AM IST)
t-max-icont-min-icon

வருகிற 10-ந் தேதி முதல் குருவாயூர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய 1000 பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று தேவசம் போர்டு தலைவர் கே.பி.மோகன்தாஸ் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தின் பிரசித்தி பெற்ற கோவிலாக குருவாயூர் கிருஷ்ணன் கோவில் உள்ளது. இங்கு வெளியூர் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்வார்கள். இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக சாமி தரிசனத்துக்கு கோவிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.

தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால் சாமி தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிப்பது குறித்து குருவாயூர் தேவசம் போர்டு தலைவர் கே.பி.மோகன்தாஸ் தலைமையில், ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குருவாயூர் கோவில் தேவசம் போர்டு அதிகாரிகள், பூசாரி, நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்திற்கு பிறகு தேவசம் போர்டு தலைவர் கே.பி.மோகன்தாஸ் கூறுகையில், கூட்டத்தில் வருகிற 10-ந் தேதி முதல் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய தினமும் 1000 பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, முககவசம் அணிந்து சாமி தரிசனம் செய்ய வேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்கள் முன்னதாக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்திருக்க வேண்டும். அதில் குறிப்பிடப்பட்டு உள்ள நேரத்தில் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து கொள்ளலாம்.இதேபோல இதுவரை குருவாயூர் கோவிலில் தினமும் 50 திருமணம் நடைபெற்றது வந்தது. இதனை 60-ஆக உயர்த்தவும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து திருமணங்களும் அரசின் வழிகாட்டுதலின்படி, விதிமுறை கடைபிடித்து நடைபெறும். மேலும் புதிதாக வாங்கிய வாகனங்களுக்கும் பூஜை செய்யவும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story