உள்நாட்டு விமான சேவையில் தளர்வு: 60 சதவீதம் விமானங்களை இயக்க விமான நிறுவனங்களுக்கு அனுமதி - மத்திய அரசு அறிவிப்பு


உள்நாட்டு விமான சேவையில் தளர்வு: 60 சதவீதம் விமானங்களை இயக்க விமான நிறுவனங்களுக்கு அனுமதி - மத்திய அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 3 Sept 2020 1:00 AM IST (Updated: 3 Sept 2020 12:53 AM IST)
t-max-icont-min-icon

இந்திய விமான நிறுவனங்கள் 60 சதவீத விமானங்களை இயக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பரவல் தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து கடந்த மார்ச் மாதத்தில் சர்வதேச மற்றும் உள்நாட்டு பயணிகள் விமான சேவை நிறுத்தப்பட்டது. இதனால் சுமார் 2 மாதங்களாக இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் விமானங்கள் ஓய்வெடுத்தன.

எனினும் கடந்த மே மாதம் 25-ந் தேதி முதல் உள்நாட்டு பயணிகள் விமான சேவையை தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதேசமயம் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு விமானங்களை இயக்குவதற்கு மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.

அதன்படி இந்திய விமான நிறுவனங்கள் தங்களிடம் உள்ள பயணிகள் விமானங்களில் 33 சதவீத விமானங்களை மட்டுமே இயக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் உள்நாட்டு விமான சேவைக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை மத்திய அரசு படிப்படியாக தளர்த்தி வருகிறது.

அந்த வகையில் விமான நிறுவனங்கள் 45 சதவீத விமானங்களை இயக்குவதற்கு கடந்த ஜூன் 26-ந் தேதிமத்திய அரசு அனுமதி வழங்கியது. இந்த நிலையில் தற்போது அதை மத்திய அரசு 60 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதற்கான உத்தரவை மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் நேற்று பிறப்பித்தது.

உள்நாட்டு விமான சேவை தொடங்கி நடைபெற்று வந்தாலும் சர்வதேச விமான சேவைக்கான தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story