இந்தியாவில் 2-வது நாளாக 83 ஆயிரம் பேருக்கு கொரோனா; குணமடைந்தோர் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியது


இந்தியாவில் 2-வது நாளாக 83 ஆயிரம் பேருக்கு கொரோனா; குணமடைந்தோர் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியது
x
தினத்தந்தி 5 Sept 2020 4:47 AM IST (Updated: 5 Sept 2020 4:47 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் தொடர்ந்து 2-வது நாளாக 83 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர் மொத்த எண்ணிக்கை 39 லட்சத்தை கடந்துள்ளது.

புதுடெல்லி,

இந்த நூற்றாண்டில் மனித குலம் சந்திக்கும் மிகப்பெரும் சவாலாக உருவாகி இருக்கிறது கொரோனா நோய்த்தொற்று. கொரோனாவை தவிர வேறு எதையும் சிந்திப்பதற்கு மனிதனை அது விடவில்லை. ஏழைகள் முதல் கோடீசுவரர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கபளீகரம் செய்ய காத்திருக்கும் கொரேனாவிடம் இருந்து தப்புவது குதிரைக்கொம்பாக மாறி இருக்கிறது.

கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துகளை உருவாக்கி இந்த சிக்கலில் இருந்து மக்களை விடுவிக்க அனைத்து நாடுகளும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இதற்காக மருத்துவ ஆய்வகங்கள் இரவு-பகலாக பணியாற்றுகின்றன. ஆனாலும் இந்த பூனைக்கு இன்னும் யாரும் மணி கட்டவில்லை.

நாள்தோறும் லட்சக்கணக்கில் புதிய தொற்றுகளும், ஆயிரக்கணக்கில் புதிய மரணங்களும் ஏற்படும் சேதிகள்தான் உலக ஊடகங்களை ஆக்கிரமித்து வருகின்றன. கொரோனாவின் இத்தகைய மனித வேட்டைக்கு இந்தியாவும் தப்பவில்லை. இங்கும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது.

உலக அளவில் அமெரிக்கா மற்றும் பிரேசிலை தொடர்ந்து, தொற்று மற்றும் பலி எண்ணிக்கையில் இந்தியா 3-வது இடம் என்ற மோசமான சாதனையை தொடர்கிறது.

இங்கு நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 83 ஆயிரத்து 341 பேர் கொரோனாவிடம் சிக்கி உள்ளனர். இதன் மூலம் தொடர்ந்து 2-வது நாளாக இந்தியாவில் 83 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கின்றன. இந்த புதிய நோயாளிகளையும் சேர்த்து இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 39 லட்சத்து 36 ஆயிரத்து 747 ஆக உயர்ந்து இருக்கிறது. இதனால் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் தொடர்ந்து முடுக்கி விட்டு உள்ளன.

இதைப்போல கடந்த 24 மணி நேரத்தில் 1,096 பேர் கொரோனாவுக்கு தங்கள் இன்னுயிரை ஈந்துள்ளனர். இதனால் நாட்டின் கொரோனா பலி எண்ணிக்கை 68,472 ஆக அதிகரித்து விட்டது. எனினும் நாட்டின் சாவு விகிதம் 1.74 ஆக குறைந்து இருக்கிறது. பலியான 1,096 பேரில் அதிகபட்சமாக 391 பேர் மராட்டியத்தை சேர்ந்தவர்கள் ஆவர். அடுத்ததாக கர்நாடகாவில் 104, தமிழகத்தில் 92, உத்தரபிரதேசம், ஆந்திராவில் தலா 75, பஞ்சாப்பில் 72, மேற்கு வங்காளத்தில் 55, மத்திய பிரதேசத்தில் 30, பீகாரில் 26, டெல்லி, அரியானாவில் தலா 19, சத்தீஷ்கார், குஜராத்தில் தலா 16, ராஜஸ்தானில் 14, காஷ்மீரில் 11 என பலி நிகழ்ந்துள்ளது.

இதைத்தவிர கேரளா, தெலுங்கானாவில் தலா 10 பேர், உத்தரகாண்டில் 9, கோவா, ஒடிசாவில் தலா 8, அசாம், புதுச்சேரியில் தலா 7, ஜார்கண்டில் 6, இமாசலபிரதேசத்தில் 5, சண்டிகரில் 4, மணிப்பூர், திரிபுராவில் தலா 3 மற்றும் அந்தமானில் ஒருவரும் பலியாகி உள்ளனர்.

நாட்டின் மொத்த கொரோனா பலி எண்ணிக்கையிலும் மராட்டிய மாநிலம் 25 ஆயிரத்து 586 உயிர்களை பறிகொடுத்து முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து தமிழகம் (7,608), கர்நாடகா (6,054), டெல்லி (4,500), ஆந்திரா (4,200), உத்தரபிரதேசம் (3,691), மேற்கு வங்காளம் (3,394), குஜராத் (3,062), பஞ்சாப் (1,690) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

இது ஒருபுறம் இருக்க நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்தவகையில் 30,37,151 பேர் இதுவரை கொரோனாவை வென்றுள்ளனர். இது 77.15 சதவீதம் ஆகும். தற்போதைய நிலையில் 8,31,124 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களில் 0.5 சதவீதத்தினர் மட்டுமே வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெறுகின்றனர். மேலும் 2 சதவீதத்தினர் தீவிர சிகிச்சை பிரிவிலும், 3.5 சதவீதத்தினர் ஆக்சிஜன் உதவியுடனும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

இதற்கிடையே நாடு முழுவதும் நேற்று முன்தினம் 11,69,765 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. இதன்மூலம் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 4 கோடியே 66 லட்சத்து 79 ஆயிரத்து 145 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு பரிசோதனைகள் அதிகரித்தாலும் தொற்றுக்கான சாத்திய விகிதம் 7.5 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது அரசுகளுக்கு ஆறுதலை அளித்துள்ளது.

தற்போதைய நிலையில் நாடு முழுவதும் 1,631 பரிசோதனைக்கூடங்கள் இரவு பகலாக கொரோனா பரிசோதனையை நடத்தி வருகின்றன. இதில் 606 பரிசோதனைக்கூடங்கள் தனியாருக்கு சொந்தமானவை ஆகும்.

Next Story