போதை பொருள் வாங்கிய விவகாரம்; நடிகர் சுஷாந்த் சிங்கின் வீட்டு பணியாளர் கைது


போதை பொருள் வாங்கிய விவகாரம்; நடிகர் சுஷாந்த் சிங்கின் வீட்டு பணியாளர் கைது
x
தினத்தந்தி 5 Sept 2020 9:34 PM IST (Updated: 5 Sept 2020 9:34 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் சுஷாந்த் சிங் வழக்கில் போதை பொருள் வாங்கிய விவகாரத்தில் அவரது வீட்டு பணியாளர் திபேஷ் சவந்த் கைது செய்யப்பட்டு உள்ளார்.

மும்பை,

நடிகர் சுஷாந்த் சிங் மும்பையில் அவரது இல்லத்தில் கடந்த ஜூன் மாதம் 14ந்தேதி தற்கொலை செய்து கொண்டார்.  இந்த வழக்கில் நடிகர் சுஷாந்த் சிங்கின் காதலி நடிகை ரியா சக்ரபோர்த்தியிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில் ரியா சக்ரபோர்த்தியின் சகோதரர் ஷோவிக் சக்ரபோர்த்திக்கு போதைப்பொருள் ஆசாமிகளுடன் தொடர்பு உள்ளது என்ற ஆதாரங்களை போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு கண்டறிந்துள்ளது. இதுவரை நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரியா எப்போதுமே தான் போதைப்பொருள் உட்கொண்டது இல்லை என மறுத்து வந்தார். சுஷாந்த் சிங் ராஜ்புத் போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டினார்.

நடிகர் சுஷாந்த் சிங் வழக்கில் போதை பொருள் வாங்கியது மற்றும் அவற்றை கையாண்டது உள்ளிட்ட விவகாரத்தில் அவரது வீட்டு பணியாளர் திபேஷ் சவந்த் என்பவரை போதை பொருள் கட்டுப்பாட்டு துறை கைது செய்துள்ளது.  கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள் மற்றும் டிஜிட்டல் சான்றுகளின் அடிப்படையில் திபேஷ் கைது செய்யப்பட்டு உள்ளார்.

அவர் நாளை காலை 11 மணியளவில் எஸ்பிளனேடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.

இந்த வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  ஷோவிக் சக்ரபோர்த்தி, சாமுவேல் மிராண்டா மற்றும் ஜெய்த் ஆகிய 3 பேரும் போதை பொருள் கட்டுப்பாட்டு துறை காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர் என அந்த துறையின் துணை இயக்குனர் மல்கோத்ரா கூறியுள்ளார்.

Next Story