கொரோனா பரிசோதனையை காரணம் காட்டி பிரசவத்தை தாமதப்படுத்தக்கூடாது - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள்


கொரோனா பரிசோதனையை காரணம் காட்டி பிரசவத்தை தாமதப்படுத்தக்கூடாது - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள்
x
தினத்தந்தி 6 Sept 2020 5:34 AM IST (Updated: 6 Sept 2020 5:34 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரிசோதனையை காரணம் காட்டி பிரசவம் மற்றும் அவசரகால சிகிச்சைகளை தாமதப்படுத்தக்கூடாது.

புதுடெல்லி,

கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான பரிசோதனை தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* தனிநபர்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப கேட்டுக்கொள்ளும்பட்சத்தில் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும். ஆனால் மாநிலங்கள், அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப இந்த அணுகுமுறையில் மாற்றம் செய்து கொள்ளலாம்.

* வெளிநாடுகளுக்கோ அல்லது வெளிமாநிலங்களுக்கோ செல்ல விரும்பும் தனிநபர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்துவது கட்டாயம் ஆகும். தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பின்னரே அவர்களை அனுமதிக்க வேண்டும்.

* நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், குறிப்பாக தொற்று பரவல் அதிகமாக இருக்கும் பகுதிகளில் வசிக்கும் அனைவருக்கும் துரித பரிசோதனை (ஆன்டிஜன் பரிசோதனை) நடத்தப்படவேண்டும்.

* கொரோனா பரிசோதனை வசதி இல்லை, பரிசோதனை தாமதம் போன்றவற்றை காரணம்காட்டி பிரசவம் மற்றும் அவசரகால சிகிச்சைகளை தாமதப்படுத்தக்கூடாது.

* தாய்க்கு கொரோனா உறுதியானால் முக கவசம் அணிந்து கொள்ளுமாறும் குழந்தையை தூக்கும் முன் கிருமிநாசினி கொண்டு கைகளை அடிக்கடி சுத்தம் செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறது.

* நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படவேண்டும். நுழைவுப்பகுதியில் உடல்வெப்ப பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

* கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், நீண்டகால நோய் உள்ளவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.

* கொரோனா பரவலுக்கு எதிராக போராடும் சுகாதார ஊழியர்கள், தூய்மைப்பணியாளர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

* பரிசோதனையை பொறுத்தமட்டில் முதலில் துரித பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். அதன்பிறகு ஆர்.டி.-பி.சி.ஆர். சோதனை செய்து கொள்ள வேண்டும்.

* துரித பரிசோதனையில் தொற்று இல்லை என்று தெரிய வந்த போதிலும் நோய்க்கான அறிகுறிகள் தெரிந்தால் மறுபடியும் துரித பரிசோதனையோ அல்லது ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனையோ செய்து கொள்ள வேண்டும்.

* ஆபரேஷன் செய்து கொள்ள இருக்கும் நபர்கள், நோய்த் தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஆபரேஷனுக்கு முன்பு 14 நாட்கள் வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

* கடந்த 14 நாட்களில் வெளிநாடு பயணம் மேற்கொண்டவர்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

மேற்கண்டவை உள்ளிட்ட பல அம்சங்கள் அதில் இடம்பெற்று உள்ளன.

Next Story