ரெயில்வேயில் 1.40 லட்சம் பணியிடங்களுக்கு ஆன்லைன் தேர்வு டிசம்பர் 15-ந் தேதி தொடங்குகிறது


ரெயில்வேயில் 1.40 லட்சம் பணியிடங்களுக்கு ஆன்லைன் தேர்வு டிசம்பர் 15-ந் தேதி தொடங்குகிறது
x
தினத்தந்தி 6 Sept 2020 7:00 AM IST (Updated: 6 Sept 2020 7:00 AM IST)
t-max-icont-min-icon

ரெயில்வேயில் 1.40 லட்சம் பணியிடங்களுக்கு டிசம்பர் 15-ந் தேதி முதல் ஆன்லைன் தேர்வு நடக்க உள்ளது.

புதுடெல்லி,

ரெயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான வினோத் குமார் யாதவ், டெல்லியில் நேற்று காணொலி காட்சி வழியாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ரெயில்வேயில் 1 லட்சத்து 40 ஆயிரத்து 640 பணி இடங்களை நிரப்புவதற்கு கணினி அடிப்படையிலான ஆன்லைன் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வு டிசம்பர் மாதம் 15-ந் தேதி தொடங்கும்.

இந்த தேர்வுக்காக 2 கோடியே 42 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலனை முடிந்து விட்டது. தேர்வுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. தேர்வு தேதிகள் முழுமையாக விரைவில் அறிவிக்கப்படும்.

உதவி லோகோ பைலட் (உதவி டிரைவர்) பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், நிச்சயமாக வேலைக்கு எடுத்துக்கொள்ளப்படுவார்கள்.

கொரோனா வைரஸ் பரவலால்தான் அவர்களை வேலையில் சேர்ப்பதில் தாமதமாகி விட்டது. ஏனெனில் அவர்களுக்கு எந்திரங்கள் மற்றும் என்ஜின்கள் குறித்து நேரடி பயிற்சி அளிக்க வேண்டியதிருக்கிறது. எனவே அவர்கள் கவலைப்படதேவையில்லை.

வரும் 12-ந் தேதி முதல் 80 சிறப்பு ரெயில்கள் (40 ஜோடி ரெயில்கள்) இயக்கப்படுகின்றன. இவற்றுக்கான முன்பதிவு 10-ந் தேதி தொடங்குகிறது. ஏற்கனவே ஓடிக்கொண்டிருக்கிற ரெயில்களுடன் இந்த ரெயில்கள் கூடுதலாக இயங்கும்.

எந்த ரெயில்களில் நீண்ட காத்திருப்பு பட்டியல் இருக்கிறது என்பதை கண்டறிய, தற்போது ஓடும் அனைத்து ரெயில்களையும் ரெயில்வே கண்காணிக்கும்.

எங்கேயும் ஒரு குறிப்பிட்ட ரெயிலுக்கு தேவை இருந்தால், எங்கேயும் காத்திருப்பு பட்டியல் நீண்டதாக இருந்தால், நாங்கள் வழக்கமான ரெயிலுக்கு முன்னால் ஒரு ‘குளோன் ரெயில்’ இயக்குவோம். தேர்வுகள் உள்ளிட்ட நோக்கங்களுக்காக மாநிலங்களிடம் இருந்து கோரிக்கை வரும்போதெல்லாம் ரெயில்களை இயக்குவோம்.

புல்லட் ரெயில் திட்டம் சிறப்பாக முன்னேறி வருகிறது. ஆனால் அது முடிவு அடைவதற்கான உண்மையான கால அளவை அடுத்த 3 முதல் 6 மாதங்களுக்குள் கூற முடியும், அப்போதுதான் நிலம் கையகப்படுத்தும் நிலை கண்டறியப்படும்.

குஜராத்தில் 82 சதவீத நிலம் எடுக்கப்பட்டு விட்டது. மராட்டியத்தில் 23 சதவீத நிலம்தான் எடுக்கப்பட்டுள்ளது. எங்கள் வடிமைப்புகள் தயாராக உள்ளன.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் டெண்டர்கள், நிலம் எடுத்தல் தாமதமானது என்பது உண்மைதான். தற்போது கொரோனா வைரஸ் நிலைமையில் முன்னேற்றம் காணப்படுவதால் நிலம் எடுக்கும் பணியை தொடங்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நாட்டின் முதல் புல்லட் ரெயில் மும்பைக்கும், ஆமதாபாத்துக்கும் இடையே இயக்கப்படும்.

Next Story