கொரோனா பாதித்த இளம்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்: ஆம்புலன்ஸ் டிரைவர் கைது
கொரோனா பாதித்த இளம்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளம்பெண், கொரோனா சிகிச்சைக்கு அழைத்துச்செல்லப்பட்ட போது, 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பத்தினம் திட்டா மாவட்டத்தை சேர்ந்த இரு பெண்கள் கொரோனா சிகிச்சைக்காக அதிகாலை 108 ஆம்புலன்ஸில் சென்றுள்ளனர். இதில் முதல் பெண், மாவட்ட மருத்துவமனையில் இறக்கிவிடப்பட்டுள்ளார். இரண்டாவது பெண் கோழேஞ்செரியில்(Kozhencherry) உள்ள கொரோனா சிகிச்சை மையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார். அதிகாலை நேரத்தில் ஆம்புலன்ஸ் கொரோனா சிகிச்சை மையத்திற்கு சென்று கொண்டிருந்த போது, திடீரென ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. தொடந்து, இளம்பெண்ணுக்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
எனினும், தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்த ஆம்புலன்ஸ் ஒட்டுநர் அங்கிருந்து கொரோனா சிகிச்சை மையத்திற்கு இளம்பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார். கொரோனா சிகிச்சை மையம் வந்ததும் தனக்கு நேர்ந்த அவலம் பற்றி மருத்துவர்களிடம் இளம்பெண் கூறியுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து, அங்கு வந்த போலீசார் இளம்பெண்ணின் வாக்குமூலத்தை பதிவு செய்தனர். ஆம்புலன்ஸ் ஓட்டுநரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கைதான ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஏற்கனவே, கொலை வழக்கில் ஒன்றில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, உடனடியாக தலையிட்ட கேரள சுகாதாரத்துறை மந்திரி ஷைலஜா, ஆம்புலன்ஸ் ஓட்டுநரை பணியில் இருந்து நீக்க உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story