ஜிஎஸ்டி வரி; ஏழை, நடுத்தர வியாபாரிகள் மீதான தாக்குதல் - மத்திய அரசு மீது ராகுல் காந்தி விமர்சனம்


ஜிஎஸ்டி வரி; ஏழை, நடுத்தர வியாபாரிகள் மீதான தாக்குதல் - மத்திய அரசு மீது ராகுல் காந்தி விமர்சனம்
x
தினத்தந்தி 6 Sept 2020 7:54 PM IST (Updated: 6 Sept 2020 7:54 PM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு கொண்டுவந்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வரி முறையே அல்ல. ஏழைகள், சிறு, நடுத்தர வியாபாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல். இதற்கு எதிராக அனைவரும் ஒன்று சேர்ந்து நிற்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

புதுடெல்லி,

நாட்டின் பொருளாதார வீழச்சி குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். கடந்த வாரம் தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 23.9 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி அடைந்தது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிக்கை வெளியானபின், மத்திய அரசை விமர்சிக்கும் வேகத்தை ராகுல் காந்தி வேகப்படுத்தியுள்ளார்.
பொருளாதாரத்தைத் தெரிந்து கொள்வோம் என்ற பெயரில் 4 நிமிட வீடியோ வெளியிட்டு, மத்திய அரசு பொருளாதாரத்தைக் கையாள்வதைக் கடுமையாக ராகுல் காந்தி சாடினார். மேலும், பண மதிப்பிழப்பு குறித்து வீடியோ வெளியிட்டு மத்திய அரசைக் கடுமையாக ராகுல் காந்தி விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், இன்று ட்விட்டரில் 3 நிமிட வீடியோவை ராகுல்காந்தி வெளியிட்டு நாட்டின் பொருளாதாரச் சீரழிவுக்குத் திட்டமிடப்படாத ஜிஎஸ்டி காரணம் என்று விமர்சித்துள்ளார்.

அந்த வீடியோவில் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது:-

''ஜிஎஸ்டி வரி என்பது முழுமையான தோல்வி அடைந்த ஒன்று. அமைப்புசாரா துறையின் மீது நடத்தப்பட்ட 2-வது தாக்குதல் ஜிஎஸ்டி வரி. இந்த ஜிஎஸ்டி வரி தோல்வியுற்றது மட்டுமல்லாமல், ஏழை மக்கள், சிறு, நடுத்தர வணிகர்கள் மீதும் தாக்குதல் நடத்தியது.

ஜிஎஸ்டி வரி என்பது வரி முறையே அல்ல. இது ஏழைகள் மீதான தாக்குதல். சிறு வணிகர்கள், சிறு, நடுத்தரத் தொழில் நடத்துவோர், வணிகர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல். இந்தத் தாக்குதலை நாம் புரிந்து கொண்டிருக்கிறோம். இதற்கு எதிராக நாம் ஒன்று சேர்ந்து நிற்க வேண்டும்.

தேசத்தின் பொருளாதாரம் சரிவடைந்ததற்கு மற்றொரு முக்கியமான காரணம் மோடி அரசின் கப்பார் சிங் டேக்ஸ் (ஜிஎஸ்டி) வரிதான். லட்சக்கணக்கான சிறு வணிகர்களை அழித்து, கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகளையும் இளைஞர்களின் எதிர்காலத்தையும், மாநில அரசுகளின் நிதிச் செழிப்பையும் அழித்துவிட்டது. ஜிஎஸ்டி என்றாலே பொருளாதாரப் பேரழிவுதான்.

ஜிஎஸ்டி வரி என்பது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சிந்தனையில் உருவானது. அதாவது, ஒரு வரி, குறைந்த வரி, நிலையான, எளிமையான வரி என்ற திட்டத்தில் கொண்டு வந்தோம்.

ஆனால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி வரி முற்றிலும் வேறுபட்டது. 4 விதமான வரிகளை அறிமுகப்படுத்தி, அதிகபட்சமாக 28 சதவீத வரியைப் புகுத்தியது. இந்த வரி முறையைப் புரிந்து கொள்வதும் சிக்கலானது, குழப்பமாகவும் இருக்கிறது.

சிறு, நடுத்தர நிறுவனங்களால் நிச்சயம் இந்த ஜிஎஸ்டி வரியைச் செலுத்த முடியாது. பெரிய நிறுவனங்கள் எளிதாக இந்த ஜிஎஸ்டி வரியைச் சில கணக்காளர்களை வைத்துச் செலுத்திவிட முடியும்.

எதற்காக இந்த 4 விதமான வரிவிகிதம். ஏனென்றால் ஜி.எஸ்.டி.யை எளிதில் மாற்றுவதற்கான வழிமுறைகளைக் கொண்டவர்களை அரசு விரும்புகிறது. மற்றும் வழிகள் இல்லாதவர்கள் ஜி.எஸ்.டியை எதுவும் செய்ய முடியாது.

அந்த மாற்றுவதற்கான வழிமுறைகளைக் கொண்டவர்கள் யார்? இந்தியாவின் 15 முதல் 20 பெரும் தொழிலதிபர்கள்தான். ஆதலால், எந்தவிதமான வரிச் சட்டமாக இருந்தாலும், இந்த ஜிஎஸ்டி வரி முறையில் அவர்கள் விரும்பும் மாற்றத்தைச் செய்ய முடியும்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கொண்டுவந்த ஜிஎஸ்டியின் விளைவு என்னவென்றால், மாநிலங்களுக்குக் கூட அதன் வரி இழப்பைக் கொடுக்க முடியாத நிலைதான் இருக்கிறது. இதனால் மாநில அரசுகள், தங்களிடம் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஊதியத்தை வழங்க முடியாத சூழலில் இருக்கிறது''.

இவ்வாறு ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

Next Story