மாணவர்களின் திறனையும், அறிவையும் வளர்க்கும்: புதிய கல்வி கொள்கையை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர் - பிரதமர் மோடி


மாணவர்களின் திறனையும், அறிவையும் வளர்க்கும்: புதிய கல்வி கொள்கையை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர் - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 7 Sept 2020 11:07 AM IST (Updated: 7 Sept 2020 11:07 AM IST)
t-max-icont-min-icon

புதிய கல்விக்கொள்கையை பெரும்பாலான மாநிலங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் கல்வியை மேம்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட புதிய தேசிய கல்வி கொள்கைக்கு சமீபத்தில் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்யவும், அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கும் வகையிலும் இந்த புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த கல்வி கொள்கைக்கு ஆதரவும், எதிர்ப்பும் இருந்து வருகிறது.

புதிய கல்வி கொள்கை தொடர்பாக நாடு முழுவதும் காணொலி காட்சி மூலம் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு புதிய கல்வி கொள்கையின் சாதக, பாதகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

புதிய கல்வி கொள்கை தொடர்பாக மத்திய கல்வி அமைச்சகமும், பல்கலைக்கழக மானிய குழுவும் சமீபத்தில் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

இந்த நிலையில், புதிய கல்வி கொள்கை குறித்த கவர்னர்கள் மாநாடு தொடங்கி உள்ளது. ‘உயர்கல்வியை மேம்படுத்துவதில் தேசிய கல்வி கொள்கையின் பங்கு’ என்ற பெயரில் நடைபெறும் இந்த மாநாட்டில் மாநில கவர்னர்கள், கல்வி மந்திரிகள், மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்று உள்ளனர்.

மத்திய கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

புதிய கல்விக்கொள்கை மற்றும் கல்விமுறை நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானது. கல்வி கொள்கையில் அரசின் பங்களிப்பு முக்கியமானது. மத்திய, மாநில அரசுகள் மட்டுமின்றி உள்ளாட்சி அமைப்புகளுக்கும் கல்வியில் பங்குண்டு.

புதிய கல்வி கொள்கையை ஆசிரியர்கள், கல்வியாளர்கள் தங்களது கல்வி கொள்கையாக பார்கின்றனர். கொள்கை வகிப்பதில் கல்வியாளர்கள் கருத்து கூற பலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

புதிய கல்விக்கொள்கையை பெரும்பாலான மாநிலங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. தேசிய கல்வி கொள்கை வடிவத்தை முடிவு செய்து நாம் முன்னேறி செல்ல வேண்டும்.

கல்வி கொள்கை தொடர்பான விவாதங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. கல்வி கொள்கையில் பங்கெடுத்துள்ள ஆசிரியர்கள் முன்னேற்றத்திற்காக பாடுபடுகின்றனர். புதிய கல்விக்கொள்கை  மாணவர்களின் திறனையும், அறிவையும் வளர்க்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story