கொரோனா பாதித்த இளம்பெண் கற்பழிப்பு விவகாரம்; கேரளாவில் மந்திரி பதவி விலக கோரி பா.ஜ.க., காங்கிரஸ் போராட்டம்
கேரளாவில் கொரோனா பாதித்த இளம்பெண் கற்பழிக்கப்பட்ட விவகாரத்தில் மந்திரி சைலஜா பதவி விலக கோரிய பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் மகளிரணி அவரது உருவ பொம்மையை தீ வைத்து கொளுத்தியது.
பத்தனம்திட்டா,
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த ஒரு தாயும், அவரது 19 வயது மகளும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் அடூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தனர். பின்னர் அந்த இளம்பெண்ணை அங்குள்ள கொரோனா சிகிச்சை மையத்துக்கு மருத்துவர்கள் நேற்று முன்தினம் மாற்றினர்.
இதற்காக அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார். செல்லும் வழியில் அந்த ஆம்புலன்ஸ் டிரைவரான நவுபல் (வயது 29), வண்டியை அரன்முழா பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் நிறுத்தினார். பின்னர் அந்த இளம்பெண்ணை கொரோனா நோயாளி என்றும் பாராமல் வலுக்கட்டாயமாக கற்பழித்தார்.
இதனால் பெரும் அதிர்ச்சியடைந்த இளம்பெண், மருத்துவமனை சென்றபின் நடந்த சம்பவம் குறித்து தனது தாயிடம் தெரிவித்து உள்ளார். அவர், உடனே மருத்துவமனை நிர்வாகம் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆம்புலன்ஸ் டிரைவர் நவுபலை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நவுபல் காயங்குளம் பகுதியை சேர்ந்தவர் எனவும், அவர் மீது ஏற்கனவே கொலை வழக்கு ஒன்றில் குற்றவாளி எனவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சைமன் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த கற்பழிப்பு சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாநில சுகாதார மந்திரி சைலஜா, இது குறித்து அதிர்ச்சியும், வேதனையும் வெளியிட்டார். இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் எனக்கூறிய அவர், குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கும், ஆம்புலன்ஸ் நிறுவனத்துக்கும் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து ஆம்புலன்ஸ் டிரைவர் நவுபலை பணி நீக்கம் செய்து ஆம்புலன்ஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்து உள்ளது. இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக மாநில மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து உள்ளது.
இந்த நிலையில், கேரள சுகாதார மந்திரி கே.கே. சைலஜா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி திருவனந்தபுரத்தில் உள்ள தலைமை செயலகம் முன்பு காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி பிரிவினர் கோஷங்களை எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சைலஜாவின் உருவ பொம்மையையும் தீயிட்டு கொளுத்தினர்.
இதே கோரிக்கையை முன்வைத்து பா.ஜ.க.வின் மகளிர் அணியினரும் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், கேரள சுகாதார மந்திரியான சைலஜாவின் உருவ பொம்மைக்கு தீ வைத்து தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் பொதுமக்களிடையே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story