கேரளாவில் தொடரும் அவலம்; கொரோனா நெகடிவ் சான்றிதழ் தருகிறேன் என கூறி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை


கேரளாவில் தொடரும் அவலம்; கொரோனா நெகடிவ் சான்றிதழ் தருகிறேன் என கூறி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை
x
தினத்தந்தி 7 Sept 2020 6:17 PM IST (Updated: 7 Sept 2020 6:17 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் கொரோனா நெகடிவ் சான்றிதழ் தருகிறேன் என கூறி பெண் ஒருவரை இளநிலை சுகாதார ஆய்வாளர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த ஒரு தாயும், அவரது 19 வயது மகளும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் அடூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தனர். பின்னர் அந்த இளம்பெண்ணை அங்குள்ள கொரோனா சிகிச்சை மையத்துக்கு மருத்துவர்கள் நேற்று முன்தினம் மாற்றினர்.

இதற்காக அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார். செல்லும் வழியில் அந்த ஆம்புலன்ஸ் டிரைவரான நவுபல் (வயது 29), வண்டியை அரன்முழா பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் நிறுத்தினார். பின்னர் அந்த இளம்பெண்ணை கொரோனா நோயாளி என்றும் பாராமல் வலுக்கட்டாயமாக கற்பழித்தார்.

இதனால் பெரும் அதிர்ச்சியடைந்த இளம்பெண், மருத்துவமனை சென்றபின் நடந்த சம்பவம் குறித்து தனது தாயிடம் தெரிவித்து உள்ளார். அவர், உடனே மருத்துவமனை நிர்வாகம் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆம்புலன்ஸ் டிரைவர் நவுபலை கைது செய்தனர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கேரளாவில் மற்றொரு பாலியல் வன்கொடுமை சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.  40 வயதுடைய பெண் ஒருவர் மலப்புரத்தில் இருந்து குளத்துப்புழாவுக்கு வீட்டில் தங்கி செவிலியர் பணிபுரிய சென்றுள்ளார்.  அவரை சிகிச்சை மையத்தில் வைத்து பரிசோதனை செய்துள்ளனர்.

இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரிய வந்தது.  இந்நிலையில், அவரை குளத்துப்புழா முதன்மை சுகாதார மைய இளநிலை சுகாதார ஆய்வாளர் பிரதீப் (வயது 44) என்பவர் தனது தொலைபேசி எண்ணை கொடுத்து, தனது வீட்டிற்கு வந்து கொரோனா நெகடிவ் சான்றிதழை பெற்று கொள்ளும்படி கூறியுள்ளார்.

இதனை நம்பி அந்த பெண்ணும் சென்றுள்ளார்.  இந்நிலையில், அந்த ஆய்வாளர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.  இதுபற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.  இதனை தொடர்ந்து போலீசார் அந்த அதிகாரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  ஆய்வாளர் இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

அவரை சுகாதார மந்திரி சைலஜா உத்தரவின் பேரில் அதிகாரிகள் சஸ்பெண்டு செய்துள்ளனர்.  ஆம்புலன்ஸ் டிரைவர் விவகாரத்தில் மந்திரி சைலஜா பதவி விலக கோரி பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் மற்றொரு சம்பவம் கேரளாவில் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது.

Next Story