ரசாயனங்கள் ஆபத்தானவை என்று தெரிந்தும் கிருமிநாசினி சுரங்கங்களுக்கு ஏன் தடை விதிக்கவில்லை? - மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
ரசாயனங்கள் ஆபத்தானவை என்று தெரிந்தும் கிருமிநாசினி சுரங்கங்களுக்கு ஏன் தடை விதிக்கவில்லை? என்று மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
புதுடெல்லி,
கொரோனா நோய்த்தடுப்புக்காக மனிதர்களின் மீது கிருமி நாசினிகளை தெளிக்கும் சுரங்கங்களுக்கு தடை விதிக்கக் கோரி சட்டக்கல்லூரி மாணவர் குருசிம்ரன் சிங் நரூலா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று மீண்டும் நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர்.சுபாஷ் ரெட்டி, எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய காணொலி அமர்வில் நடைபெற்றது. அப்போது பொது சுகாதாரம் மற்றும் ஆஸ்பத்திரிகள், மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளின் பொறுப்பில் உள்ளன என்றும், மத்திய சுகாதார அமைச்சகம் பிறப்பிக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியது மாநில அரசுகளின் கடமை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து நீதிபதிகள் ரசாயனங்கள் தீங்கு விளைவிக்கும் என்று தெரிந்தபோதும், இதுபோன்ற கிருமி நாசினி சுரங்கங்களுக்கு ஏன் மத்திய அரசு தடை விதிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு மத்திய அரசு தரப்பில் இது தொடர்பாக உரிய வழிகாட்டும் நெறிமுறைகள் பிறப்பிக்கப்படும் என்றும், கிருமி நாசினிகள் தெளிப்பதற்கு தடை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து விசாரணையை இரு வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
Related Tags :
Next Story