அதிவேக ஏவுகணை என்ஜின் வெற்றிகரமாக சோதனை - விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் பாராட்டு
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிவேக ஏவுகணை என்ஜின் சோதனை வெற்றிகரமாக நடந்தது. இதற்காக விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி மற்றும் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
புதுடெல்லி,
ஒலியை விட வேகமாக செல்லும் (ஹைபர்சோனிக்) ஏவுகணைகளை உள்நாட்டிலேயே தயாரிக்க இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த ஏவுகணைகளில் பயன்படுத்தப்படும் என்ஜின் அதாவது ஹைபர்சோனிக் தொழில்நுட்ப செயல்முறை வாகனத்தை (எச்.எஸ்.டி.டி.வி) இந்திய ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) வடிவமைத்து உள்ளது.
ஹைபர்சோனிக் உந்துவிசை தொழில்நுட்ப அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்த வாகனம் நேற்று ஒடிசாவின் சந்திப்பூர் கடற்பகுதியில் உள்ள அப்துல்கலாம் தீவில் இருந்து செலுத்தி சோதிக்கப்பட்டது. காலை 11.03 மணியளவில் நடந்த இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்தது.
எச்.எஸ்.டி.டி.வி.யால் ஒலியை விட 6 மடங்கு வேகத்தில் செல்லவும், 32.5 கி.மீ. உயரத்தை 20 வினாடிகளில் அடையவும் முடியும் என அரசு கூறியுள்ளது. எதிர்காலத்தில் நீண்டதூர ஏவுகணைகளை வடிவமைப்பதற்கு இந்த எச்.எஸ்.டி.டி.வி. மிகப்பெரும் உதவியாக இருக்கும். அத்துடன் குறைந்த செலவில் செயற்கைகோள்களை ஏவுவதற்கும் இது உதவும்.
இந்த சோதனை வெற்றி பெற்றிருப்பதன் மூலம் எச்.எஸ்.டி.டி.வி.யை பெற்றிருக்கும் குறிப்பிட்ட சில நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது. அந்தவகையில் அமெரிக்கா, சீனா, ரஷியாவுக்கு அடுத்ததாக 4-வது நாடாக இந்தியா இணைந்துள்ளது. இதனால் டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஸ்கிராம்ஜெட் தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த என்ஜின் கொண்ட ஹைபர்சோனிக் ஏவுகணைகள் ஒலியை விட 6 மடங்கு வேகத்தை எட்ட முடியும் என டி.ஆர்.டி.ஓ. அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது ராம்ஜெட் என்ஜினை விட சிறந்தது எனவும் அவர் கூறினார்.
இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்திருப்பதன் மூலம் அடுத்த தலைமுறை ஹைபர்சோனிக் ஏவுகணைகளுக்கான மிகவும் சிக்கலான தொழில்நுட்பத்தை உள்நாட்டு பாதுகாப்பு தொழில்துறையுடன் இணைந்தே உருவாக்க முடியும் என்பதை இந்தியா வெளிப்படுத்தி இருப்பதாகவும் அவர் பெருமிதத்துடன் கூறினார்.
எச்.எஸ்.டி.டி.வி. சோதனையை வெற்றிகரமாக நடத்தியதற்காக டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘வெற்றிகரமான ஹைபர்சோனிக் செயல்முறை வாகன பரிசோதனைக்காக இந்திய ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துக்கு பாராட்டுகள். நமது விஞ்ஞானிகள் வடிவமைத்த ஸ்கிராம்ஜெட் என்ஜினால் ஒலியை விட 6 மடங்கு வேகத்தை ஏவுகணை பெற்றுள்ளது. இன்று, இந்த திறனை மிகச்சில நாடுகளே பெற்றிருக்கின்றன’ என்று குறிப்பிட்டு உள்ளார்.
இதைப்போல ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தனது டுவிட்டர் தளத்தில், ‘உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ஸ்கிராம்ஜெட் உந்துவிசை அமைப்பை கொண்ட ஹைபர்சோனிக் தொழில்நுட்ப செயல்முறை வாகனத்தை டி.ஆர்.டி.ஓ. வெற்றிகரமாக சோதித்து உள்ளது. இந்த வெற்றி மூலம் அனைத்து சிக்கலான தொழில்நுட்பங்களும் தற்போது அடுத்தகட்டத்தை எட்டியுள்ளன’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மைல்கல் சாதனை மூலம் பிரதமர் மோடியின் தற்சார்பு இந்தியா கனவை நனவாக்கியதற்காக டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிகளை பாராட்டுவதாக கூறியுள்ள ராஜ்நாத் சிங், அவர்களால் இந்தியா பெருமை கொள்வதாகவும் தெரிவித்தார்.
Related Tags :
Next Story