சீன ராணுவத்தால் கடத்தப்பட்ட 5 இளைஞர்களின் கதி தெரியவில்லை-அருணாசலபிரதேச போலீஸ் கைவிரிப்பு
சீன ராணுவத்தால் கடத்தப்பட்ட 5 இளைஞர்களின் கதி என்ன என்று தெரியவில்லை என்று அருணாசலபிரதேச போலீசார் தெரிவித்தனர்.
இடாநகர்,
அருணாசலபிரதேச மாநிலம் மேல் சுபன்சிறி மாவட்டத்தில் சீன எல்லை அருகே உள்ள நசோ பகுதியை சேர்ந்த கிராமத்து இளைஞர்கள் 5 பேர், கடந்த வெள்ளிக்கிழமை, சீன ராணுவத்தால் கடத்திச் செல்லப்பட்டனர். அவர்கள் இந்திய ராணுவத்துக்கு சுமை தூக்குபவர்களாகவும், வழிகாட்டிகளாகவும் இருந்தவர்கள்.
வேட்டையாட காட்டுக்குள் சென்றபோது, அவர்கள் கடத்தப்பட்டதாக அவர்களுடன் சென்று வீடு திரும்பிய 2 இளைஞர்கள் தெரிவித்தனர். அதுபற்றி 5 பேரின் குடும்பத்தினரும் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தனர். அதனால், அருணாசலபிரதேசம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.
அருணாசல் கிழக்கு தொகுதி எம்.பி.யும், மத்திய மந்திரியுமான கிரன் ரிஜிஜு, இதுகுறித்து சீன ராணுவத்துக்கு ‘ஹாட்லைன்’ மூலம் இந்திய ராணுவம் செய்தி அனுப்பி இருப்பதாகவும், ஆனால் சீன ராணுவத்திடம் இருந்து இன்னும் பதில் வரவில்லை என்றும் தெரிவித்தார். சீன ராணுவத்தினர் இதுபோன்று அடிக்கடி ஆட்களை கடத்தி வருவதாக அனைத்து அருணாசலபிரதேச மாணவர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, மேல் சுபன்சிறி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாரு குஸ்சார் கூறியதாவது:-
யாரும் போலீசிடமோ, ராணுவத்திடமோ முறைப்படி புகார் அளிக்கவில்லை. எங்களது உள்ளூர் வட்டாரங்கள் மூலம்தான் இத்தகவலை அறிந்தோம். தகவலை உறுதி செய்ய முயன்று வருகிறோம். அந்த இளைஞர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று இன்னும் தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த மார்ச் மாதம், சீன ராணுவத்தால் கடத்தப்பட்ட 21 வயது இளைஞர், 19 நாட்களுக்கு பிறகு விடுவிக்கப்பட்டார்.
Related Tags :
Next Story