சீனாவுடனான எல்லை விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை ஆலோசனை கூட்டம்


சீனாவுடனான எல்லை விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 8 Sept 2020 2:55 PM IST (Updated: 8 Sept 2020 2:55 PM IST)
t-max-icont-min-icon

சீனாவுடனான எல்லை விவகாரம் பற்றி ஆலோசனை மேற்கொள்ள பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்களுடனான ஆலோசனை கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.

புதுடெல்லி,

லடாக் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டதால் இந்தியா மற்றும் சீனா இடையே எல்லை பிரச்சினை அதிகரித்துள்ளது.  இதனால் எல்லையில் பதற்ற நிலை நீடிக்கிறது.

இந்த நிலையில், லடாக்கில் எல்லை கட்டுப்பாட்டு பகுதியை தாண்டி வந்த இந்திய வீரர்கள் பாங்கோங் ஏரி சமவெளி பகுதிகளில், துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சீன ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.  சீன ராணுவ செய்தி தொடர்பாளர் இது பற்றி கூறுகையில், எல்லை கட்டுப்பாட்டு பகுதியை சட்டவிரோதமாக கடந்த இந்திய ராணுவம், சீன ராணுவத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பாங்கோங் ஏரி மற்றும் ஷென்போ மலைப்பகுதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்தியது.

எனவே நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர நாங்கள் பதில் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்றார்.  எனினும், எந்த மாதிரியான பதில் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது பற்றி எந்த தகவலையும் வெளியிடவில்லை.

இதேபோன்ற குற்றச்சாட்டை சீன வெளியுறவு அமைச்சகமும் வெளியிட்டுள்ளது.  தொடர்ந்து, இந்தியாவின் அணுகுமுறை ஒப்பந்த விதிமீறல் என்றும் இது தீவிர ராணுவ அத்துமீறல் நடவடிக்கை என்றும் சீனா குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.

சீனாவின் இந்த குற்றச்சாட்டை இந்திய ராணுவம், நிராகரித்துள்ளது.  இது குறித்து இந்திய ராணுவம் கூறுகையில், ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறி இந்திய நிலைகளை நோக்கி நெருங்கி வர முயற்சித்ததோடு வானை நோக்கி சீனா துப்பாக்கியால் சுட்டது.  ஆனால், உள்நாட்டு, சர்வதேச சமூகங்களை சீனா தனது அறிக்கைகளால் ஏமாற்ற முயற்சிக்கிறது.  இந்த பதற்றமான தருணத்திலும் இந்திய ராணுவம் மிகவும் நிதானத்தை கடைபிடித்ததோடு, முதிர்ச்சியுடனும் பொறுப்புணர்வுடனும் நடந்து கொண்டது என்று தெரிவித்துள்ளது.

இந்த சூழலில், சீனாவுடனான எல்லை பிரச்சினை குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று மாலை ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.  பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், பல்வேறு துறை அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும்.  இதில், எல்லையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மோடியிடம் எடுத்துரைக்கப்படும்.  இரு நாட்டு எல்லை விவகாரத்தில் சுமூக தீர்வு எட்டுவதற்கான ஆலோசனை மேற்கொள்ளப்படும்.

Next Story