பணமோசடி வழக்கு; சந்தா கோச்சாரின் கணவருக்கு வருகிற 19ந்தேதி வரை அமலாக்க துறை காவல்


பணமோசடி வழக்கு; சந்தா கோச்சாரின் கணவருக்கு வருகிற 19ந்தேதி வரை அமலாக்க துறை காவல்
x
தினத்தந்தி 8 Sept 2020 6:59 PM IST (Updated: 8 Sept 2020 6:59 PM IST)
t-max-icont-min-icon

பணமோசடி வழக்கில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி முன்னாள் தலைவர் சந்தா கோச்சாரின் கணவருக்கு வருகிற 19ந்தேதி வரை அமலாக்க துறை காவல் விதிக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் சந்தா கோச்சார்.  இவரது கணவர் தீபக் கோச்சார்.  சந்தா கோச்சார் பதவியில் இருந்தபோது, வீடியோகான் நிறுவனத்துக்கு ரூ.1,875 கோடி முறைகேடாக கடன் வழங்கியதாக கூறப்பட்டது.

இதற்கு கைமாறாக தீபக் கோச்சார் நிறுவனத்தில் வீடியோகான் நிர்வாகி வேணுகோபால் தூத் முதலீடு செய்ததாக கூறப்பட்டது. இது தொடர்பாக சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார், வேணுகோபால் தூத் உள்ளிட்டவர்கள் மீது அமலாக்கத்துறையினர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்ந்து அமலாக்கத்துறையினர் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மும்பையில் சந்தா கோச்சார், வேணுகோபால் தூத் ஆகியோரின் வீடு, அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினர். 5 இடங்களில் இந்த சோதனை நடந்தது. மேலும் அவுரங்காபாத் நகரில் உள்ள அலுவலகங்களிலும் சோதனை நடந்தது. இந்த சோதனையின் போது பணமோசடி வழக்கிற்கு தேவையான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் கைப்பற்றியதாக தெரிகிறது.

ஊழல் மற்றும் பணமோசடி தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் பேரில் சந்தா கோச்சாரிடம் சி.பி.ஐ. மற்றும் அமலாக்க துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

கோச்சார் கடந்த 2009ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரையிலான தனது பதவி காலத்தில், சட்டவிரோத முறையிலான மற்றும் குற்றநோக்குடன் வங்கியில் இருந்து கடன் வழங்கப்பட்டு உள்ளது என அமலாக்க துறை குற்றச்சாட்டு தெரிவித்தது.  இதேபோன்று, சி.இ.ஓ. மற்றும் மேலாண் இயக்குனராக கோச்சார் இருந்தபோது ரூ.7,862 கோடி அளவிலான 24 கடன்களை வழங்கியதில் மோசடி நடந்துள்ளது என்றும் குற்றச்சாட்டு கூறப்பட்டு உள்ளது.

இவற்றில் பெருமளவில் வீடியோகான் குழும நிறுவனங்களுக்கு கடனாக வழங்கப்பட்டு உள்ளது என அமலாக்க துறையின் விசாரணை அறிக்கை தெரிவிக்கின்றது.  இந்த நிலையில் பணமோசடி வழக்கில் கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார் அமலாக்க துறையால் நேற்று கைது செய்யப்பட்டார்.

அவர் மும்பையில் உள்ள அமலாக்க துறை அலுவலகத்தில் இருந்து பணமோசடி தடுப்பு சட்ட நீதிமன்றத்திற்கு இன்று அழைத்து செல்லப்பட்டார்.  அவரை வருகிற 19ந்தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்து உள்ளது.  இதனை தொடர்ந்து அவரை அமலாக்க துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர்.

Next Story