எதிர்க்கட்சிகள் சார்பில்மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தலுக்கு பொது வேட்பாளர்-காங்கிரஸ் முடிவு


எதிர்க்கட்சிகள் சார்பில்மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தலுக்கு பொது வேட்பாளர்-காங்கிரஸ் முடிவு
x
தினத்தந்தி 9 Sep 2020 2:17 AM GMT (Updated: 9 Sep 2020 2:17 AM GMT)

மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவை துணைத்தலைவராக இருந்த ஹரிவன்‌‌ஷ் பதவிக்காலம் முடிவடைந்ததால், அப்பதவி காலியாக உள்ளது. அதற்கு இம்மாதம் தேர்தல் நடக்கிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 14-ந் தேதி தொடங்குகிறது.

இந்த விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சியின் வியூகம் வகுக்கும் குழுவின் கூட்டம் நேற்று நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமை தாங்கினார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ராகுல்காந்தி, இரு அவைகளின் காங்கிரஸ் தலைவர்கள் குலாம்நபி ஆசாத், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கொறடாக்கள், துணை கொறடாக்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் குறித்து தெரிவிக்குமாறு சோனியா காந்தி தனது தொடக்க உரையில் கேட்டுக்கொண்டார்.

இந்த கூட்டத்தில், மாநிலங்களவை துணைத்தலைவர் பதவிக்கு எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக மற்ற எதிர்க்கட்சிகளுடன் பேச திட்டமிடப்பட்டது.

மழைக்கால கூட்டத்தொடரில், கேள்வி நேரத்தை வழக்கம்போல் நடத்துமாறு காங்கிரஸ் கட்சி வலியுறுத்த உள்ளது. கொரோனா தினசரி பாதிப்பு அதிகரிப்பு, இந்திய-சீன எல்லை நிலவரம் ஆகியவற்றையும் எழுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு எதிராக பிற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து கூட்டாக வியூகம் வகுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.


Next Story