மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தல்: ஐக்கிய ஜனதாதள எம்.பி. ஹரிவன்ஷ் மனுதாக்கல்
மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தலுக்காக, ஐக்கிய ஜனதாதள எம்.பி. ஹரிவன்ஷ் மனுதாக்கல் செய்தார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மாநிலங்களவை துணைத்தலைவராக இருந்து வரும் ஐக்கிய ஜனதாதள எம்.பி. ஹரிவன்ஷின் உறுப்பினர் பதவி காலம் முடிவடைவதை தொடர்ந்து, மாநிலங்களவை துணைத்தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 7-ந் தேதி தொடங்கியது. நாளையுடன் (வெள்ளிக்கிழமை) மனு தாக்கல் முடிவடைகிறது. மாநிலங்களவை துணைத்தலைவர் பதவிக்கு பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் ஹரிவன்ஷ் மீண்டும் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை நேற்று அவர் தாக்கல் செய்தார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 14-ந் தேதி தொடங்கி அக்டோபர் 1-ந் தேதி வரை நடைபெறுகிறது. கூட்டத்தொடரின் முதல் நாளில் மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தல் நடைபெறும் என்று தெரிகிறது. இந்த தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பிஜூ ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஹரிவன்ஷ் வெற்றி பெற்று மீண்டும் மாநிலங்களவை துணைத்தலைவர் ஆவார் என்று பாரதீய ஜனதா நம்பிக்கை தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story