கேரளாவில் வருகிற 14-ந் தேதி வரை கனமழை பெய்யும் - வானிலை மையம் தகவல்


கேரளாவில் வருகிற 14-ந் தேதி வரை கனமழை பெய்யும் - வானிலை மையம் தகவல்
x
தினத்தந்தி 11 Sep 2020 12:22 PM GMT (Updated: 11 Sep 2020 12:22 PM GMT)

கேரளாவில் 14-ந் தேதி வரை கனமழை பெய்யும். எனவே மலையோர மக்கள் கவனமாக இருக்கும்படி வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் தற்போது அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கனமழையாகவும் உள்ளது. இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

கேரளாவில் வருகிற 14-ந் தேதி வரை மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும். மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 5 மாவட்டங்களில் 2 நாட்கள் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

அதே போல் மற்ற மாவட்டங்களில் 14-ந் தேதி வரை லேசானது முதல் கன மழை பெய்யும். இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. பலத்த மழை காரணமாக நகர பகுதிகளில் தாழ்வான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மேலும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீண்டும் அவ்வாறு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் மலையோர பகுதிகளில் வாழும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும் இரவு நேர மலையோர பயணத்தை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story