தேசிய கல்வி கொள்கை புதிய இந்தியாவை உருவாக்கும்; பிரதமர் மோடி நம்பிக்கை


தேசிய கல்வி கொள்கை புதிய இந்தியாவை உருவாக்கும்; பிரதமர் மோடி நம்பிக்கை
x
தினத்தந்தி 12 Sept 2020 3:48 AM IST (Updated: 12 Sept 2020 3:48 AM IST)
t-max-icont-min-icon

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தேசிய கல்வி கொள்கை புதிய இந்தியாவை உருவாக்கும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி,

புதிய தேசிய கல்வி கொள்கையின் கீழ், 21-ம் நூற்றாண்டில் பள்ளிக்கல்வி என்ற பெயரில் நேற்று மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது:-

புதிய இந்தியாவின் தேவைக்கு ஏற்ப, நாட்டுக்கு வளமான எதிர்காலத்தை உருவாக்கும் வகையில் புதிய தேசிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டு உள்ளது. இது 21-ம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு புதிய பாதையை ஏற்படுத்திக்கொடுக்கும். கடந்த 30 ஆண்டுகளாக இருந்து வரும் கல்வி முறையால் நமது வாழ்க்கை எந்த மாற்றமும் ஏற்படாமல் அப்படியேதான் இருக்கிறது. புதிய கல்வி கொள்கை புதிய இந்தியாவை உருவாக்கும்; புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும்; புதிய எண்ணங்களை நிறைவேற்றும்.

வல்லுனர்களின் 4 ஆண்டுகால கடின உழைப்பில் உருவாக்கப்பட்டதுதான் தேசிய கல்வி கொள்கை. அதை நிறைவேற்றுவதற்கான உண்மையான பணி இப்போதுதான் தொடங்கி இருக்கிறது.

ஆக்கமும், ஊக்கமும் கொண்ட இளைஞர்கள்தான் நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். அவர்களுடைய முன்னேற்றம் என்பது குழந்தை பருவத்திலேயே தொடங்கவேண்டும். எனவே அவர்கள் கல்வி கற்பதற்கான உகந்த சூழ்நிலை சிறுவயதிலேயே அவர்களுக்கு வாய்க்க வேண்டும்.

மழலையர் பள்ளியில் குழந்தைகளின் கண்டுபிடிப்பு திறனை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களுடைய திறமையை வளர்க்கும் வகையில் வேடிக்கையாகவும், விளையாட்டு மூலமும் அவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் சொல்லிக்கொடுக்க வேண்டும். புதிய தேசிய கல்வி கொள்கை இதற்கு உதவுவதாக அமைந்து உள்ளது.

தற்போது நகரங்களில் இருக்கும் மழலையர் பள்ளிகள் தேசிய கல்வி கொள்கை நிறைவேற்றப்படும் போது கிராமங்களிலும் அமைக்கப்படும். 3-வது வகுப்பு படிக்கும் குழந்தை ஒரு நிமிடத்தில் 30 முதல் 35 வார்த்தைகளை எளிதில் வாசிக்கக்கூடிய நிலையை ஏற்படுத்த வேண்டும்.

பள்ளி குழந்தைகளை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், விவசாய பண்ணைகள், தொழிற்சாலைகளுக்கு கல்விச் சுற்றுலாவாக அழைத்துச் செல்ல வேண்டும். இதன்மூலம் உலக நடப்பு பற்றிய அவர்களுடைய அறிவுத்திறன் மேம்படும்.

21-ம் நூற்றாண்டில் தரவு விஞ்ஞானம், ரோபோட்டிக்ஸ், கண்டுபிடிப்புகள், கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் போன்றவற்றில் மாணவர்கள் தங்கள் திறமையை மேற்படுத்திக் கொள்வது அவசியம் ஆகும். தங்களுக்கு எந்த துறையில் ஆர்வம் இருக்கிறதோ அது தொடர்பான பாடத்தை தேர்வு செய்து படிப்பதற்கான சுதந்திரத்தை மாணவர்களுக்கு தேசிய கல்வி கொள்கை வழங்கி இருக்கிறது.

மதிப்பெண் பட்டியலால் மாணவர்களுக்கு ஏற்படும் மனஅழுத்தத்தை போக்குவதும் தேசிய கல்வி கொள்கையின் முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும். மதிப்பெண் பட்டியலுக்கு பதிலாக மாணவர்களின் ஒட்டுமொத்த திறனை மதிப்பிடும் வகையிலான மதிப்பீட்டு அட்டை வழங்கப்படும். இதற்காக தேசிய மதிப்பீட்டு மையம் ஏற்படுத்தப்படும்.

எந்த மொழியில் படிப்பது எளிதாக இருக்குமோ, அந்த மொழியில் கல்வி கற்க வேண்டும். இதை கருத்தில் கொண்டுதான் பெரும்பாலான நாடுகளில் இருப்பது போல் தாய்மொழியில் ஆரம்ப கல்வி இருக்க வேண்டும் என்று யோசனை தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தேசிய கல்வி கொள்கையை நிறைவேற்றுவது தொடர்பான கலந்துரையாடல்களில் ஆசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள் ஆர்வத்துடன் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. இதை நிறைவேற்றுவது தொடர்பாக ஒரு வாரத்தில் மட்டும் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட யோசனைகள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.

இந்த கல்வி கொள்கையை அறிவித்த பிற பல கேள்விகள் எழுப்பப்பட்டு உள்ளன. அதுகுறித்து இந்த மாநாட்டில் விவாதிப்பது அவசியம் ஆகும். தேசிய கல்வி கொள்கையை நிறைவேற்றுவதில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், தன்னார்வலர்கள், நிர்வாகிகள் என அனைத்து தரப்பினருக்கும் பொறுப்பு இருக்கிறது. எனவே இதில் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.  இவ்வாறு அவர் கூறினார்.

Next Story