இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆப்கானிஸ்தான் மண்ணில் இடம் தரக்கூடாது - வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்


இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆப்கானிஸ்தான் மண்ணில் இடம் தரக்கூடாது  - வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்
x
தினத்தந்தி 12 Sept 2020 7:12 PM IST (Updated: 12 Sept 2020 7:12 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆப்கானிஸ்தான் மண்ணில் ஒரு போதும் இடம் தரக்கூடாது என்பதே எங்கள் எதிர்பார்ப்பு என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஆப்கனில் அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாக தோகாவில் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில், 'வீடியோ கான்பரன்சிங்' வாயிலாக ஜெய்சங்கர் பேசியதாவது:

ஆப்கானிஸ்தானின் உடனான இந்தியாவின் நட்பு வரலாற்றுக்கு ஒரு சான்றாகும். ஆப்கானிஸ்தானில் 400க்கும் கூடுதலான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த உறவு தொடர்ந்து வளரும் என்ற நம்பிக்கை உள்ளது. எப்போதும் நாங்கள் சிறந்த நட்பு நாடுகளாக இருந்துள்ளோம்.

இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆப்கானிஸ்தானின் மண்ணில் ஒரு போதும் இடம் தரக்கூடாது என்பதே எங்கள் எதிர்பார்ப்பு. நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்படும் அமைதி ஏற்பட, போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட இந்தியா ஆதரவு அளிக்கும்.

ஆப்கானிஸ்தான் தலைமையில் அமைதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன், சிறுபான்மையினர் மற்றும் பெண்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும்.

ஆப்கானிஸ்தானின் வளர்ச்சி கூட்டணியில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு இருக்கும். ஆப்கானிஸ்தானுக்கு லட்சக்கணக்கான டன் உணவு தானியங்களை இந்தியா வழங்கியுள்ளது.

மருத்துவ சிகிச்சைக்காக ஆப்கானிஸ்தான் நாட்டினர் இந்தியாவுக்கு வர வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளோம்.  இது ஆப்கானிஸ்தானின் ஸ்திரத்தன்மை, வளர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு, எங்களது உறுதித்தன்மைக்கு சில எடுத்துக்காட்டுகள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story