சட்டம் மற்றும் ஒழுங்கை கவனிக்க முடியவில்லை எனில் பதவியில் இருந்து விலகுங்கள்; தாக்கப்பட்ட கடற்படை அதிகாரி பேட்டி


சட்டம் மற்றும் ஒழுங்கை கவனிக்க முடியவில்லை எனில் பதவியில் இருந்து விலகுங்கள்; தாக்கப்பட்ட கடற்படை அதிகாரி பேட்டி
x
தினத்தந்தி 12 Sep 2020 5:58 PM GMT (Updated: 12 Sep 2020 5:58 PM GMT)

சட்டம் மற்றும் ஒழுங்கை கவனிக்க முடியவில்லை எனில் முதல் மந்திரி பதவியில் இருந்து விலகுங்கள் என உத்தவ் தாக்கரேவை, சிவசேனா தொண்டர்களால் தாக்கப்பட்ட ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி கூறியுள்ளார்.

மும்பை,

மும்பையில் ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி மதன் சர்மா என்பவர், சிவசேனாவுக்கு எதிரான குறுஞ்செய்தியை மற்றவர்களுக்கு பரிமாற்றம் செய்தது தொடர்பாக கொலை மிரட்டல் வந்த நிலையில் கும்பல் ஒன்று அவரது வீட்டிற்கு சென்று அவர் மீது கடுமையாக தாக்குதல் நடத்தி உள்ளனர்.  இந்த நிலையில், அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்களாக கூறப்படும் சிவசேனா தொண்டர்களான கம்லேஷ் கதம் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.  அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபற்றி அதிகாரி மதன் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, நான் காயமடைந்து உள்ளேன்.  மனஉளைச்சலில் உள்ளேன்.  நடந்த சம்பவம் வருத்தத்திற்குரியது.  உங்களால் சட்டம் மற்றும் ஒழுங்கை கவனிக்க முடியவில்லை எனில், பதவி விலகுங்கள் என உத்தவ் தாக்கரேவிடம் சொல்லி கொள்ள விரும்புகிறேன்.  அவற்றை யார் கவனிக்க வேண்டும் என மக்கள் முடிவு செய்யட்டும்.

அவர்கள் எனது குழந்தைகளையும், எனது குடும்பத்தினரையும் மற்றும் என்னையும் துன்புறுத்த கூடும்.  அதனால், எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என முதல் மந்திரியை கேட்டு கொள்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.

தொடர்ந்து அவர், உத்தவ் தாக்கரேஜியின் அனைத்து தொண்டர்களும் மற்றும் அமைப்பினரும், இதுபோன்ற தாக்குதல் சம்பவம் வேறு யாருக்கும் மீண்டும் நடக்காது என்பதற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Next Story