சட்டசபை தேர்தல் நடக்க உள்ள பீகாரில் நிதிஷ் குமார் ஆட்சிக்கு மோடி பாராட்டு; லாலு பிரசாத், காங்கிரசுக்கு குட்டு


சட்டசபை தேர்தல் நடக்க உள்ள பீகாரில் நிதிஷ் குமார் ஆட்சிக்கு மோடி பாராட்டு; லாலு பிரசாத், காங்கிரசுக்கு குட்டு
x
தினத்தந்தி 13 Sep 2020 7:09 PM GMT (Updated: 13 Sep 2020 7:09 PM GMT)

சட்டசபை தேர்தல் நடக்க உள்ள பீகாரில் நிதிஷ் குமார் ஆட்சியை நல்லாட்சி என்று பிரதமர் மோடி பாராட்டினார். அதே நேரத்தில் லாலு பிரசாத், காங்கிரசுக்கு அவர் குட்டு வைத்தார்.

பாட்னா,

நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளம், பாரதீய ஜனதா கட்சி கூட்டணி ஆட்சி நடைபெறுகிற பீகாரில் வரும் அக்டோபர்-நவம்பரில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் இந்த கூட்டணி களம் இறங்குகிறது.

இந்த தருணத்தில் அங்கு ரூ.900 கோடி மதிப்பில் 3 பெட்ரோலிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் இருந்தவாறு நேற்று அந்த திட்டங்களை காணொலி காட்சி வழியாக தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் பீகாரில் நிதிஷ் குமார் தலைமையில் நல்லாட்சி நடந்து வருவதாக பாராட்டினார்.

அதே நேரத்தில் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவ், அவரது கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி ஆகியவற்றின் பெயரைக் குறிப்பிடாமல் மாநிலங்களின் பின்தங்கிய நிலைக்கு காரணம் என கடுமையாக சாடி குட்டு வைத்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில் கூறியதாவது:-

பீகார் மாநிலம், நீண்ட காலமாகவே ஒரு விசித்திரத்தால் பாதிக்கப்பட்டிருந்தது. சாலை திட்டங்கள் முடங்கின. கால்நடையாக நடந்து செல்வோருக்கும், வாகனங்கள் இல்லாதோருக்கும் இவர்கள் என்ன தரப்போகிறார்கள் என்று மக்கள் கேள்வி கேட்டனர்.

முன்னேற்றத்துக்கான இத்தகைய அலட்சியம், உயர் கல்வியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக நல்லாட்சியில் (நிதிஷ் குமார்) உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. புதிதாக மருத்துவ கல்லூரிகள், என்ஜினீயரிங் கல்லூரிகள், சட்ட கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள் வந்துள்ளன. இது தொடர்வதை உறுதி செய்வதில் நிதிஷ் குமாருக்கு முக்கிய பங்கு உள்ளது.

பீகாரில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நெருக்கடி, எங்களுக்கு வாய்ப்புகளையும் வழங்கி உள்ளது. விரைவான பொருளாதார நடவடிக்கைகளை முடுக்கி விடுவதின்மூலம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வழிகளைப்பற்றி நாம் சிந்திக்க முடியும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Next Story