மதுரை மாணவி தற்கொலை: மத்திய அரசு மீது அகிலேஷ் யாதவ் தாக்கு


மதுரை மாணவி தற்கொலை:  மத்திய அரசு மீது அகிலேஷ் யாதவ் தாக்கு
x
தினத்தந்தி 14 Sept 2020 5:25 AM IST (Updated: 14 Sept 2020 5:25 AM IST)
t-max-icont-min-icon

மதுரை மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் மத்திய அரசு மீது அகிலேஷ் யாதவ் தாக்கும் வகையில் பேசியுள்ளார்.

லக்னோ,

மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வான ‘நீட்’ நேற்று நாடு முழுவதும் நடந்தது. இந்த தேர்வு குறித்த அச்சத்தால் தமிழகத்தில் 3 மாணவர்கள் நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டனர். இதில் மதுரையை சேர்ந்த ஜோதி ஸ்ரீ துர்கா என்ற மாணவியும் அடங்குவார்.

இந்த சம்பவங்கள் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மாநில அரசியல் கட்சிகளும், தமிழக மக்களும் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

இந்த நிலையில் மாணவி ஜோதி ஸ்ரீ துர்காவின் மரணம் தொடர்பாக சமாஜ்வாடி தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியுமான அகிலேஷ் யாதவ் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘மருத்துவம் படிக்க விரும்பிய ஒரு மாணவி மதுரையில் நேற்று (நேற்று முன்தினம்) தற்கொலை செய்து கொண்ட தகவல் ஒவ்வொரு குடும்பத்துக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதற்கு யார் காரணம்? என்பதை இதயமில்லா பா.ஜனதா கூற வேண்டும். இது ஒரு கொலை. இத்துடன் பிரதமரின் ‘மகளை பாதுகாப்போம், மகளை படிக்க வைப்போம்’ என்ற கோஷமும் கொல்லப்பட்டு உள்ளது’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

Next Story