17 எம்.பி.க்களுக்கு கொரோனா தொற்று உறுதி


17 எம்.பி.க்களுக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 14 Sept 2020 3:38 PM IST (Updated: 14 Sept 2020 3:43 PM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரையொட்டி நடத்தப்பட்ட பரிசோதனையில் 17 எம்.பி.க்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பரவ தொடங்கியதால் பிரதமர் மோடி கடந்த மார்ச் மாதம், நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவித்தார்.

அவர் இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு சில தினங்களுக்கு முன் நாடாளுமன்ற கூட்டம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும் நோய்த் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

இதற்கிடையே லடாக் எல்லையில் சீன ராணுவம் அத்துமீற முயன்றது. அதற்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் அங்கு ஏற்பட்ட பதற்றம் இன்னும் தீரவில்லை.

கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறியதால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து விட்டதாகவும், லடாக் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் தோல்வி அடைந்து விட்டதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், 5 மாதங்களுக்கு பிறகு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது.  இந்த கூட்டத்தொடர் இன்று முதல் அக்டோபர் 1-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. மொத்தம்18 நாட்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

இதற்கிடையே மத்திய மந்திரிகள் மற்றும் எம்.பி.க்கள் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு உள்ளனர். நாட்டில் பெருந்தொற்று பரவல் தீவிரமாக இருந்து வரும் நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற இருப்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. அனைத்து எம்.பி.க் களும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரையொட்டி நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 17 எம்.பி.க்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.  மீனாட்சி லேக்கி, ஆனந்த் குமார் ஹெக்டே, பர்வேஷ் ஷாஹிப் சிங் உள்ளிட்ட 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.   இதில், 12 பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, ஒய்ஆர்எஸ் காங்கிரசில் இருவர், சிவசேனா, திமுக மற்றும் ஆர்எல்பி கட்சியைச் சேர்ந்த தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Next Story