தேவையில்லாத பிரச்சினைகளை பெரிதுப்படுத்த மும்பையை தேர்வு செய்துள்ளனர் - மத்திய அரசு மீது சிவசேனா தாக்கு


தேவையில்லாத பிரச்சினைகளை பெரிதுப்படுத்த மும்பையை தேர்வு செய்துள்ளனர் - மத்திய அரசு மீது சிவசேனா தாக்கு
x
தினத்தந்தி 15 Sep 2020 3:17 AM GMT (Updated: 15 Sep 2020 3:17 AM GMT)

மக்கள் பிரச்சினைகளை மறைத்து தேவையில்லாத பிரச்சினைகளை பெரிதுப்படுத்துவதற்காக மும்பையை மத்திய அரசு தேர்வு செய்து இருப்பதாக சிவசேனா குற்றம்சாட்டி உள்ளது.

மும்பை, 

இது குறித்து சிவசேனா கட்சியின் சாம்னா பத்திரிகையில் கூறியிருப்பதாவது:-

2016-ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதார சீரழிவு ஏற்பட்டு கோடிக்கணக்கான மக்கள் வேலை இழந்தனர். தற்போது கொரோனா ஊரடங்கால் அதே நிலை ஏற்பட்டு உள்ளது. சீனா விவகாரம் பெரும் பிரச்சினையாக உருவாகி உள்ளது. பாகிஸ்தான் நேரடியாக நம்மிடம் மோதுகிறது. இதுபோன்ற பல முக்கியமான பிரச்சினைகள் நம்மை சூழ்ந்து உள்ளன.

சீனா உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் தீவிரமாக விவாதிக்கப்படுமா?. முக்கிய பிரச்சினைகள் மலிந்து கிடக்க, இல்லாத பிரச்சினைகளை பூதாகரமாக்க முயற்சி நடக்கிறது.

மக்களின் வாழ்வாதாரம் மற்றும் நாட்டு பாதுகாப்பு போன்ற பிரச்சினைகள் மறைக்கப்படுகின்றன. ஆனால் தேவையில்லாத பிரச்சினைகள் பெரிதுப்படுத்தப்படுகின்றன. வேலையின்மை, விலைவாசி உயர்வு போன்ற பிரச்சினைகளை மறைப்பதற்காக இல்லாத பிரச்சினைகள் கிளப்பப்படுகின்றன. இதற்காக வேண்டுமென்றே மும்பை தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயின் கேலி சித்திரத்தை பரப்பிய ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி என்ன சாதித்து விட்டார். கடற்படையில் பணியாற்றியபோது, அரசியல் அமைப்பு சட்ட பதவிகளை இப்படித்தான் மதிக்க வேண்டும் என்று அவர் கற்று கொண்டாரா?. இந்த சம்பவத்தை கண்டித்து பா.ஜனதா போராட்டம் நடத்துகிறது. ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் சம்பந்தப்பட்ட ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரியை தொடர்பு கொண்டு பேசுகிறார். முதல்-மந்திரி ராஜினாமா செய்யவேண்டும் என்று அந்த ஓய்வுபெற்ற அதிகாரியும் வலியுறுத்துகிறார்.

சீன தாக்குதலில் 20 வீரர்கள் கொல்லப்பட்டதற்காக ஜனாதிபதி, பிரதமர், ராணுவ மந்திரி ஆகியோரை பதவி விலகுமாறு அவர் வலியுறுத்த வேண்டும். உத்தரபிரதேசத்தில் ஓய்வுபெற்ற ராணுவ கேப்டன் அனுமானுல்லா அடித்து கொல்லப்பட்டார். அவரது மனைவியிடம் பிரதமரோ அல்லது ராணுவ மந்திரியோ போனில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறாதது ஏன்?. எனவே தேவையில்லாத நடவடிக்கைகளை மேற்கொள்ள மராட்டியத்தை தேர்வு செய்துள்ளனர்.

மும்பை போலீசாரை அவமதித்தவருக்கு (நடிகை கங்கனா ரணாவத்) ஒய்-பிளஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. இதை என்ன சொல்வது?.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story