லடாக்கில் எத்தகைய சூழலையும் சமாளிக்க படைகள் தயார்; மக்களவையில் ராஜ்நாத் சிங் தகவல்


லடாக்கில் எத்தகைய சூழலையும் சமாளிக்க படைகள் தயார்; மக்களவையில் ராஜ்நாத் சிங் தகவல்
x
தினத்தந்தி 16 Sept 2020 4:45 AM IST (Updated: 16 Sept 2020 12:45 AM IST)
t-max-icont-min-icon

லடாக்கில் ஒரு சவாலை சந்தித்து வருவதாகவும், அங்கு எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள படைகள் தயார் எனவும் மக்களவையில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.

புதுடெல்லி,

கிழக்கு லடாக் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவ முயன்றதால் இருநாட்டு வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக அங்கு பதற்றம் நிலவி வருகிறது. அங்கு அமைதியை ஏற்படுத்துவதற்காக தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொண்டும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.

இந்த மோதல் தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் நேற்று ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

லடாக் எல்லையில் கடந்த ஏப்ரல் மாதம் முதலே சீனா அதிக அளவில் படைகள் மற்றும் ஆயுதங்களை குவித்து வந்தது. பின்னர் மே மாத தொடக்கத்தில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நமது வீரர்களின் வழக்கமான ரோந்துப்பணிகளை தடுக்க முயற்சித்தது. இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

உடனே களத்தில் உள்ள ராணுவ அதிகாரிகள் இந்த சூழலை திறம்பட கையாண்டு இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் நடைமுறைகளை பின்பற்றி பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தனர். ஆனால் மே மாத மத்தியில், சீன படையினர் கோங்கா லா, கோக்ரா மற்றும் பங்கோங் ஏரியின் வடக்கு கரை உள்ளிட்ட பகுதிகளில் ஊடுருவ முயன்றனர். இதை விரைவில் கண்டறிந்த இந்திய ராணுவம் சரியான முறையில் அதை முறியடித்தது.

இதன் தொடர்ச்சியாக கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ஜூன் 15-ந்தேதி இரு தரப்புக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் உயிரிழப்பு உள்ளிட்ட பல்வேறு சேதங்களை சீன ராணுவத்துக்கு இந்திய வீரர்கள் ஏற்படுத்தினர்.

சீன ராணுவத்தின் வன்முறை நடவடிக்கை, கடந்தகால ஒப்பந்தங்களை மீறும் செயலாகும். சீன ராணுவத்துக்கு பதிலடியாக நமது ராணுவமும் நமது எல்லையை பாதுகாப்பதற்காக பல இடங்களில் படைகளை நிறுத்தி இருக்கிறது.

அதேநேரம் சீனாவுடன் ராணுவம் மற்றும் தூதரக ரீதியாக தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இதில் எல்லையில் நிலவும் இயல்பு நிலையை தன்னிச்சையாக மாற்ற முயல்வதை ஏற்க முடியாது என தெளிவாக சீனாவிடம் எடுத்துரைத்திருக்கிறோம்.

இந்த பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை. இருதரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு இன்னும் எட்டப்படவில்லை. இதனால் லடாக்கில் ஒரு சவாலை எதிர்கொண்டு வருகிறோம். அங்கு பாரம்பரிய மற்றும் வழக்கமான சீரமைப்பு எல்லையை அங்கீரிக்க சீனா மறுத்து வருகிறது.

இந்த பிரச்சினை தொடர்பாக 1950-60-களில் இருந்தே இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் இருதரப்பும் ஏற்கும் வகையிலான தீர்வை இதுவரை எட்ட முடியவில்லை.

லடாக்கில் சுமார் 38 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பை போரின் போது சீனா சட்ட விரோதமாக ஆக்கிரமித்து இருக்கிறது. மேலும் 1963-ம் ஆண்டின் சீனா-பாகிஸ்தான் எல்லை ஒப்பந்தத்தின்படி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 5,180 சதுர கி.மீ. பகுதியை பாகிஸ்தான் சட்ட விரோதமாக சீனாவுக்கு விட்டுக்கொடுத்து இருக்கிறது.

இந்த சூழலில் எல்லையில் எத்தகைய சவாலையும் எதிர்கொள்ள நமது படைகள் தயாராக இருக்கின்றன என்பதை இந்த அவைக்கு உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பூஜ்ஜியம் டிகிரிக்கும் கீழே நிலவும் கடுமையான குளிர், அச்சுறுத்தும் ஆக்சிஜன் குறைபாடு என கடுமையான சூழலிலும் சிறப்பாக பணியாற்றும் திறமையை அவர்கள் பெற்றுள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக சியாச்சின் மற்றும் கார்கிலில் இதைத்தான் அவர்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.

மேலும் நமது வீரர்களின் மன உறுதி வலிமையாக இருக்கிறது. இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.

அதேநேரம் நமது இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் வீரர்களுடன் தோளோடு தோள் நிற்பதை உறுதி செய்யும் வகையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுமாறு மக்களவையை நான் கேட்டுக்கொள்கிறேன். நமது வீரர்களின் பின்னால் ஒட்டுமொத்த நாடும் உறுதியாகவும், ஒற்றுமையுடனும் இருக்கும் சேதியை பிரதமர் மோடியின் லடாக் பயணம் எடுத்துரைத்தது.  இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.

மேலும் இரு நாட்டு ராணுவ, வெளியுறவு மந்திரிகள் இடையே மாஸ்கோவில் நடந்த பேச்சுவார்த்தைகள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.

இதைத்தொடர்ந்து இந்த பிரச்சினை தொடர்பாக மேலும் சில கேள்விகளை எழுப்ப காங்கிரஸ் உறுப்பினர்கள் முயன்றனர். இதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதிக்கவில்லை.

இதனால் அதிருப்தியடைந்த காங்கிரஸ் உறுப்பினர்கள், அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இந்த நிலையில் மக்களவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் அனைத்துக்கட்சிகளின் அவைத்தலைவர்கள் பங்கேற்றனர். இதில் லடாக் மோதல் குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது.

ஆனால் இந்த கூட்டத்தில் அரசு சார்பில் பங்கேற்ற நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி, காங்கிரஸ் கோரிக்கையை நிராகரித்தார். இந்த விவகாரம் சிக்கலானது மட்டுமின்றி தேசிய பாதுகாப்பு சம்பந்தமானது என்பதால் அதை பொதுவெளியில் விவாதிக்க முடியாது என தெரிவித்தார்.

Next Story