பள்ளிகளுக்கு மாற்று கல்வி நாட்காட்டி; மத்திய கல்வித்துறை வெளியிட்டது


பள்ளிகளுக்கு மாற்று கல்வி நாட்காட்டி; மத்திய கல்வித்துறை வெளியிட்டது
x
தினத்தந்தி 15 Sep 2020 9:26 PM GMT (Updated: 15 Sep 2020 9:26 PM GMT)

பள்ளிகளுக்கு 8 வார காலத்துக்கான மாற்று கல்வி நாட்காட்டியை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 16-ந் தேதி முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

ஊரடங்கு தளர்வுகளை ‘அன்லாக்’ என்ற பெயரில், பல்வேறு கட்டங்களாக மத்திய அரசு அறிவித்தது. ஆனாலும் கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்டுதான் உள்ளன.

வரும் 21-ந் தேதி முதல், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில், பள்ளிகளில் ஓரளவு பணிகளை மீண்டும் தொடங்க மத்திய கல்வி அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதற்காக வழிகாட்டும் விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பள்ளிகளில் இடைநிலை வகுப்புகளுக்கு, அடுத்த 8 வார காலத்துக்கான மாற்று கல்வி நாட்காட்டியை (ஆல்டர்னேடிவ் அகாடமிக் காலண்டர்) மத்திய கல்வி அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது.

இதுபற்றி மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் கூறியதாவது:-

பாட திட்டம் அல்லது பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட கருப்பொருள் அல்லது அத்தியாயம் அடிப்படையிலான சுவாரசியமான மற்றும் சவாலான செயல்பாடுகளை வார அடிப்படையில் கல்வி நாட்காட்டி கொண்டுள்ளது. மிக முக்கியமாக கற்றல் விளைவுகளுடன் கருப்பொருட்களை வரைபடமாக்குகிறது. இதன் நோக்கம், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் குழந்தைகளின் கற்றலில் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கு பாடப்புத்தகங்களுக்கு அப்பால் செல்வதற்கு உதவுவதாகும்.

நாட்காட்டியில் கொடுக்கப்பட்டுள்ள செயல்பாடுகள், கற்றல் விளைவுகளை மையமாக கொண்டுள்ளன. இது கலை கல்வி, உடற்பயிற்சிகள், யோகா, தொழில் திறன் உள்ளிட்டவற்றையும் உள்ளடக்கியதாகும்.

இந்த நாட்காட்டியில் வகுப்பு, பொருள்வாரியான செயல்பாடுகள், இந்தி, ஆங்கிலம், உருது, சமஸ்கிருதம் ஆகிய 4 மொழிகளுடன் தொடர்படையவை. செல்போன், ரேடியோ, டெவிவிஷன், குறுந்தகவல், பல்வேறு சமூக ஊடகங்களுக்கான அணுகல் அளவுகள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன.

நம்மில் பலருக்கு செல்போன் இணைய தளவசதி இல்லை. வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர் மற்றும் கூகுள் போன்ற பல்வேறு சமூக ஊடகங்களை பயன்படுத்த முடியாமல் போகலாம். ஆனால் இந்த நாட்காட்டியானது, செல்போன் குறுந்தகவல்கள், அழைப்புகள் வழியாக பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் உதவ ஆசிரியர்களுக்கு வழிகாட்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Next Story