ஆக்ஸ்போர்டின் கொரோனா தடுப்பூசி மருந்தை இந்தியாவில் மீண்டும் பரிசோதனை செய்யலாம் - இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி


ஆக்ஸ்போர்டின் கொரோனா தடுப்பூசி மருந்தை இந்தியாவில் மீண்டும் பரிசோதனை செய்யலாம் - இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி
x
தினத்தந்தி 16 Sep 2020 5:40 AM GMT (Updated: 16 Sep 2020 5:40 AM GMT)

ஆக்ஸ்போர்டின் கொரோனா தடுப்பூசி மருந்தை இந்தியாவில் மீண்டும் பரிசோதனை செய்யலாம் என்று சீரம் நிறுவனத்திற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

புதுடெல்லி,

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன. அமெரிக்காவின் தேசிய சுகாதார அமைப்பும், மாடர்னா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள தடுப்பூசி இறுதிக்கட்ட சோதனையில் உள்ளது. ரஷியா தனது ஸ்புட்னிக்-5 தடுப்பூசி தயாராகிவிட்டதாக கூறி இருக்கிறது.

இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனம் ஆகியவை இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளன. இந்த தடுப்பூசியை இந்தியாவில் தயாரிப்பதற்கு மராட்டிய மாநிலம் புனேயைச் சேர்ந்த இந்திய சீரம் இன்ஸ்டிடியூட், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்து உள்ளது. இந்த தடுப்பூசிக்கு இந்தியாவில் ‘கோவிஷீல்டு’ என்று பெயரிடப்பட்டு உள்ளது.

கொரோனா வைரசை வீழ்த்துவதற்கான ஆன்டிபாடிகளையும், டி செல்களையும் ஒரு சேர இந்த தடுப்பூசி உருவாக்குவது இரட்டை பாதுகாப்பு என விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கிறார்கள். இந்த தடுப்பூசியின் இரண்டு கட்ட சோதனைகள் ஏற்கனவே வெற்றிகரமாக முடிவடைந்து விட்டன. இதைத்தொடர்ந்து மூன்றாவது கட்ட பரிசோதனை கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது.

இங்கிலாந்து, அமெரிக்கா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் சுமார் 30 ஆயிரம் பேருக்கு இந்த தடுப்பூசியை போட்டு அவர்களுடைய உடல்நிலையை பரிசோதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தசூழலில், இங்கிலாந்தில் இந்த கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்களில் ஒருவருக்கு எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்டு அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் தடுப்பூசி பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

தற்போது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி பரிசோதனை இங்கிலாந்தில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து கமிட்டி தனது விசாரணைகளை முடித்து, இங்கிலாந்தில் அஸ்ட்ரா ஜெனேகா சோதனைகள் மீண்டும் தொடங்குவது பாதுகாப்பானது என்று கூறி அனுமதி கொடுத்ததையடுத்து, அஸ்ட்ரா ஜெனகே நிறுவனம் பரிசோதனையை தொடங்கியுள்ளது.

இதனைத்தொடர்ந்து, அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் கோவிஷீல்டு மருந்தை பரிசோதித்து வரும் சீரம் இன்ஸ்ட்டியுட் நிறுவனம், இந்தியாவிலும் தடுப்பு மருந்து பரிசோதனையை மீண்டும் துவங்க தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் ஆக்ஸ்போர்டின் கொரோனா தடுப்பூசி மருந்தை இந்தியாவில் மீண்டும் பரிசோதனை செய்யலாம் என்று சீரம் நிறுவனத்திற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.


Next Story