விவசாயிகள் தொடர்பான மசோதாக்களுக்கு எதிர்ப்பு - மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா


விவசாயிகள் தொடர்பான மசோதாக்களுக்கு எதிர்ப்பு - மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா
x
தினத்தந்தி 17 Sept 2020 10:00 PM IST (Updated: 17 Sept 2020 10:00 PM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட விவசாயிகள் தொடர்பான மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா செய்துள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் இன்று அத்தியாவசிய பொருட்கள் மசோதா 2020, விவசாயிகள் உற்பத்தி வர்த்தகம் மசோதா 2020, விலைவாசி தொடர்பான விவசாயிகள் அதிகாரம் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்த மசோதா 2020 ஆகிய 3 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மசோதாக்களை, ஆரம்ப நிலையில் இருந்தே பாஜக கூட்டணி கட்சியான சிரோன்மணி அகாலிதளம் எதிர்த்து வருகிறது.

இந்நிலையில் மக்களவையில் இன்று பேசிய சிரோன்மணி அகாலிதள கட்சியின் தலைவரான சுக்பீர் சிங் பாதல் எம்.பி., இந்த மூன்று மசோதாக்களும் விவசாயிகளுக்கு எதிரானது என்று கூறினார். மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தங்கள் கட்சியைச் சேர்ந்த மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் பதவி விலகுவார் என்று அறிவித்தார்.

இதனை தொடர்ந்து மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இது குறித்த அறிவிப்பை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், விவாசாயிகளின் மகளாகவும், சகோதரியாகவும் அவர்களுடன் துணை நிற்பதில் பெருமை கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ள ஹர்சிம்ரத் கவுர் பாதல், சிரோன்மணி அகாலிதள கட்சியின் தலைவரான சுக்பீர் சிங் பாதலின் மனைவி ஆவார். பாஜகவில் அங்கம் வகித்த ஷிரோமணி அகாலிதள கட்சியின் ஒரே உறுப்பினர் இவர் தான். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இந்த கட்சி பாஜகவுடன் நீண்ட தொடர்பில் இருந்து வந்துள்ளது.

மேலும், “ஹர்சிம்ரத் கவுர் பதவி விலகினாலும் அகாலிதள கட்சி பாஜகவிற்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கும், ஆனால் விவசாயிகளுக்கு எதிரான எந்த திட்டத்தையும் ஆதரிக்க முடியாது” என்று சுக்பீர் சிங் பாதல் கூறியுள்ளார்.

Next Story