தேசிய செய்திகள்

ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா செய்தது ஒரு நாடகம் - காங்கிரஸ் குற்றச்சாட்டு + "||" + Harsimrat Kaur Badal Issues First Response After Cabinet Exit, Launches Attack On Congress

ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா செய்தது ஒரு நாடகம் - காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா செய்தது ஒரு நாடகம்  - காங்கிரஸ் குற்றச்சாட்டு
மத்திய மந்திரி பதவியில் இருந்து ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா செய்தது ஒரு நாடகம் என காங்கிரஸ் கூறியுள்ளது.
புதுடெல்லி,

மத்தியில் உள்ள பிரதமர் மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசில் சிரோமணி அகாலிதளமும் இடம் பெற்று இருந்தது. இந்த கட்சிக்கு மக்களவையில் 2 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவரான சிரோமணி அகாலிதளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல், அக்கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக இருக்கிறார்.


மற்றொரு உறுப்பினராக அவரது மனைவி ஹர்சிம்ரத் கவுர் பாதல், மோடி அரசில் உணவு பதப்படுத்துதல் தொழில் மந்திரியாக இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த14-ந் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளில் மக்களவையில் விவசாய விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்ட மசோதா ஆகிய மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்தது. வேளாண் துறை தொடர்பாக ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டங்களுக்கு மாற்றாக இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மசோதாக்களுக்கு ஆளும் பாரதீய ஜனதாவின் கூட்டணி கட்சியான சிரோமணி அகாலிதளம் ஏற்கனவே கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. பஞ்சாப், அரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளும் இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அத்தியாவசிய பொருட்கள் சட்ட திருத்த மசோதா கடந்த செவ்வாய்க்கிழமை மக்களவையில் நிறைவேற்றப்பட்ட போது, சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல் மசோதாவுக்கு எதிரான வாக்கு அளித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மக்களவையில் மற்ற 2 வேளாண் மசோதாக்கள் மீது நேற்று நடைபெற்ற விவாதத்தில் சுக்பீர் சிங் பாதல் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 3 வேளாண் மசோதாக்களுக்கு சிரோமணி அகாலி தளத்தின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் ஹர்சிம்ரத் கவுர் பாதல் மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்வார் என்று திடீரென்று அறிவித்தார். ஹர்சிம்ரத் கவுர் பாதல் பதவி விலகினாலும் மத்திய அரசுக்கு சிரோமணி அகாலி தளத்தின் ஆதரவு தொடரும் என்றும் அப்போது அவர் கூறினார். அவர் இவ்வாறு பேசிய சிறிது நேரத்தில் மத்திய மந்திரி பதவியில் இருந்து ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தையும் வழங்கினார்.

இந்தநிலையில் இது ஒரு நாடகம் என காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா டுவிட்டரில் பதிவில்,

உண்மையின் பக்கம் நிற்காமல், பாஜக தலைமையிலான கூட்டணியில் சிரோமணி அகாலி தளம் நீடிக்கிறது. மசோதாக்கள் குறித்து அமைச்சரவை முடிவு எடுக்கும் போதே, ஹர்சிம்ரத் கவுர் பாதல் எதிர்காதது ஏன்?. அப்போதே ராஜினாமா செய்து, பாஜக வுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற்றிருக்கலாமே?. நாடகம் நடத்தாமல் விவசாயிகள் பக்கம் நில்லுங்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

பஞ்சாப் முதல்-மந்திரி அமரிந்தர் சிங்கும், பஞ்சாப் காங்கிரஸ் கட்சியும், ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா செய்திருப்பது நாடகம் என குற்றம்சாட்டி உள்ளது.