என்.ஐ.ஏ. கைது செய்த அல்கொய்தா பயங்கரவாதிகளில் 4 பேருக்கு பாகிஸ்தானுடன் நேரடி தொடர்பு


என்.ஐ.ஏ. கைது செய்த அல்கொய்தா பயங்கரவாதிகளில் 4 பேருக்கு பாகிஸ்தானுடன் நேரடி தொடர்பு
x
தினத்தந்தி 19 Sep 2020 9:28 AM GMT (Updated: 19 Sep 2020 9:28 AM GMT)

தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்த அல்கொய்தா பயங்கரவாதிகளில் 4 பேருக்கு பாகிஸ்தான் தலைமையுடன் நேரடி தொடர்பு உள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது என என்.ஐ.ஏ. அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி,

தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து மேற்கு வங்காளம் மற்றும் கேரளாவில் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் 9 அல் கொய்தா இயக்க பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்திலும், கேரளாவில் எர்ணாகுளத்திலும் இன்று அதிகாலை என்.ஐ.ஏ. அதிகாரிகள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.  இதனைத்தொடர்ந்து மேற்கு வங்காளத்தில் 6 பேரும், கேரளாவில் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மாநிலங்களுக்கு உள்ளே முக்கிய பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து என்.ஐ.ஏ. தெரிவிக்கையில், “டிஜிட்டல் சாதனங்கள், ஆவணங்கள், ஜிகாதி இலக்கியம், கூர்மையான ஆயுதங்கள், நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உடல் கவசம், வீட்டில் தயாரிக்கக்கூடிய வெடிக்கும் சாதனங்களை தயாரிக்க பயன்படுத்தப்படும் கட்டுரைகள் உள்ளிட்ட ஏராளமான ஆவணங்கள் இவர்கள் வசம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என்று தெரிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து 9 பயங்கரவாதிகளிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.  இதில், அவர்களில் 4 பேர் காஷ்மீருக்கு செல்ல திட்டமிட்டு உள்ளனர் என தெரிய வந்துள்ளது.  மேற்கு வங்காளத்தின் லியூ யீயான் அகமது மற்றும் அபு சுபியான் ஆகியோரும், கேரளாவின் முசரப் உசேன் மற்றும் முர்ஷித் ஹசன் ஆகியோரும் என 4 பேரும் பாகிஸ்தானிய தலைமையுடன் நேரடி தொடர்பு கொண்டிருந்துள்ளனர்.

இவர்கள் 4 பேரும் பாகிஸ்தானிய தலைமையின் உத்தரவின்படி காஷ்மீரில் ஆயுதங்கள் வினியோகம் செய்வதற்கு திட்டமிட்டு இருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது என என்.ஐ.ஏ. அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.  தொடர்ந்து மற்றவர்களிடமும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

Next Story