சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட வழிவகுக்கிறதா? டி.ஆர்.பாலு எம்.பி. கேள்விக்கு, மத்திய மந்திரி பதில்


சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட வழிவகுக்கிறதா? டி.ஆர்.பாலு எம்.பி. கேள்விக்கு, மத்திய மந்திரி பதில்
x
தினத்தந்தி 20 Sept 2020 4:24 AM IST (Updated: 20 Sept 2020 4:24 AM IST)
t-max-icont-min-icon

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை-2020, பெரிய பாசன திட்டங்கள், சுற்றுச்சூழலுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட வழிவகுக்கிறதா?

புதுடெல்லி,

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை-2020, பெரிய பாசன திட்டங்கள், சுற்றுச்சூழலுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட வழிவகுக்கிறதா? என்றும், 2 ஆயிரம் ஹெக்டேர் முதல் 10 ஆயிரம் ஹெக்டேர் வரையுள்ள நிலப்பரப்பில் அமைக்கப்படும் நீர் பாசன திட்டங்களை நிறைவேற்றும்போது, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடும், பொதுமக்கள் கருத்து கேட்பும் தேவை இல்லை எனவும் வரைவு அறிவிக்கையில் வழி செய்யப்பட்டுள்ளதா? என்றும் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை மந்திரியிடம் மக்களவையில் தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. நேற்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து மத்திய சுற்றுச்சூழல் துறை இணை மந்திரி பாபுல் சுப்ரியோ பேசியதாவது:-

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை-2020, பாசன திட்டங்களை நிறைவேற்றும் போது சுற்றுச்சூழல் விதிகளை மீறுவதற்கு எந்த விதமான அனுமதியும் அளிக்கவில்லை. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை-2006-ன் விதிகள் எதுவும் தளர்த்தப்படவில்லை. சுற்றுச்சூழல் துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் மற்றும் நீதிமன்றங்களின் ஆணைகளின்படி சேர்க்கப்பட்டுள்ளன. 2 ஆயிரம் ஹெக்டேர் முதல் 10 ஆயிரம் ஹெக்டேர் வரை உள்ள பாசன நிலப்பரப்பில் அமைக்கப்படும் நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்றும்போது 2006-ம் ஆண்டு அறிவிக்கையில் விதி விலக்குகள் அளிக்கப்பட்டிருந்தன. ஆனால் 2020-ம் ஆண்டு வரைவு அறிவிக்கையில் இந்த பாசன திட்டங்கள் பி2 வகையில் சேர்க்கப்பட்டு, சுற்றுச்சூழல் விதிகளை கடைப்பிடிப்பது மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story